நாளை திருமணமாக உள்ள நிலையில் சிக்கிய புதுமாப்பிள்ளை! விவாகரத்தான பெண்களே குறி.. அதிர்ச்சி பின்னணி
சென்னையில் திருமணம் செய்துகொள்வதாக கூறி விவாகரத்தான பல பெண்களை ஏமாற்றிய மோசடி நபர், பெண்ணொருவரின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருநின்றவூரில் வசித்து வருபவர் விக்ரம் வேதகிரி. இவருக்கு நாளைய தினம் திருமணமாக உள்ளது. இந்த நிலையில் இவர் மீது பெண்ணொருவர் அதிர்ச்சி புகார் ஒன்றை காவல்நிலையத்தில் அளித்தார்.
விக்ரம் வேதகிரிக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும், அதனை தடுத்தி நிறுத்தி மணப்பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். குறித்த பெண் 2016ஆம் ஆண்டில் தனது கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்ற நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் முகநூலில் விக்ரம் வேதகிரியுடன் அறிமுகமாகியுள்ளார். அதன் பின்னர் இருவரும் நேரில் சந்தித்து பழகியபோது, விக்ரம் அப்பெண்ணிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த குறித்த பெண், நாளடைவில் சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து விக்ரம் அவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டு, பெற்றோர் எதிர்ப்பினால் வீட்டை விட்டு வெளியேறி குறித்த பெண்ணின் வீட்டிலேயே தங்கியுள்ளார். விரைவில் ஊரறிய அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்த விக்ரம், நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் முறைப்படி திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். மேலும், பல வழிகளில் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், விக்ரம் திடீரென தலைமறைவான நிலையில், அவர் விட்டுச்சென்ற உடைந்த செல்போனை எடுத்து குறித்த பெண் சரி செய்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த செல்போனில் ஆபாச புகைப்படங்கள், பல பெண்களுடன் தொடர்பில் இருந்த வீடியோக்கள் இருந்துள்ளன. மேலும், சொந்த உறவுகளைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் ஆபசக் கதைகள், மீம்களை விக்ரமே எழுதி வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் ஜூன் 16ஆம் திகதி விக்ரமுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளது என்பதை அறிந்த குறித்த பெண், திருமணத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அங்கு நடவடிக்கை எடுக்காததால் காவல் ஆணையர் அலுவலகத்தில் தற்போது புகார் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்களை எல்லாம் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியுள்ளார். மேலும் அவர் இதுதொடர்பாக கூறுகையில், 'உரிய நியாயம் கிடைக்காமலும், பாதிக்கப்பட்டோரின் பெயர் வெளியில் வந்துவிடும் என பயந்தும் பெரும்பாலான பெண்கள் விக்ரம் மீது புகார் அளிக்கவில்லை. ஆனால் என்னைப்போல் இன்னொரு பெண் பாதிக்கப்படாமல் இருக்கத்தான் விக்ரம் மீது நானாக முன்வந்து புகார் அளித்துள்ளேன். இம்முறை காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார். அத்துடன் விவாகரத்தான பெண்களை தான் குறி வைத்து விக்ரம் வேதகிரி ஏமாற்றி வந்துள்ளார் என அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்த புகார் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. விக்ரமை கைது செய்த மகளிர் பொலிஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 417- ஏமாற்றுதல், 420- மோசடி, 406- நம்பிக்கை மோசடி, 354(ஏ)- பாலியல் வன்கொடுமை, 354- வன்முறையால் பெண்ணை மானபங்கப்படுத்துதல், 506(2)- கொலை மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் விக்ரம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.