கணவர் வெளிநாட்டிலிருப்பதாக கூறிய பெண்: திரைப்பட பாணியில் ஒரு திடுக் சம்பவம்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், தன் கணவர் அவுஸ்திரேலியாவில் வேலை செய்துவருவதாகக் கூறி பெண்ணொருவர் அவரது குடும்பத்தினரை ஏமாற்றிவந்த நிலையில், தற்போது அவரது குட்டு வெளிப்பட்டுள்ளது.
கணவர் வெளிநாட்டிலிருப்பதாக கூறிய பெண்
குஜராத்திலுள்ள ஜாம்நகர் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் ஜிக்னேஷ் மாவடியா. ஜிக்னேஷின் மனைவி ப்ரித்வி.

ஜிக்னேஷின் குடும்பத்தினர் அவர் இரண்டு ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வேலை செய்துவருவதாக நம்பிக்கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார்.
அங்கு சென்று ஜிக்னேஷ் தங்கியிருப்பதாக கூறப்பட்ட முகவரியில் அவரைத் தேடும்போதுதான் தெரிந்துள்ளது அவர் அவுஸ்திரேலியாவில் இல்லை என்பது.
சந்தேகம் எழவே, ஜிக்னேஷின் சகோதரர் பொலிசில் புகாரளிக்க, பொலிஸ் விசாரணையில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரைப்பட பாணியில் ஒரு திடுக் சம்பவம்
ஆம், ஜிக்னேஷின் மனைவியாகிய ப்ரித்வியும், ப்ரித்வியின் காதலனான நிலேஷ் என்பவரும் சேர்ந்து ஜிக்னேஷுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து அவரைக் கொன்றுள்ளார்கள்.
பின்னர் திரைப்படம் ஒன்றில் வரும் காட்சி ஒன்றைப்போல, அவரது உடலை தொழிற்சாலை ஒன்றிற்குக் கொண்டு சென்று, அங்கு 12 முதல் 15 அடி ஆழமுள்ள ஒரு குழியைத் தோண்டி, ஜிக்னேஷ் உடலை புதைத்துள்ளார்கள்.

இரண்டு ஆண்டுகளாக ஜிக்னேஷ் அவுஸ்திரேலியாவில் வேலை செய்வதாகவும், மொபைல் பயன்படுத்த அவர் வேலை செய்யும் நிறுவனம் அனுமதியளிக்கவில்லை என்றும் கூறி, ஜிக்னேஷின் மனைவியாகிய ப்ரித்வி அவரது குடும்பத்தினரை ஏமாற்றி வந்துள்ளார் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தகவல்களைத் தொடர்ந்து, ஜிக்னேஷின் மனைவியாகிய ப்ரித்வியும், ப்ரித்வியின் காதலனான நிலேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் அடையாளம் காட்டிய தொழிற்சாலையிலிருந்து ஜிக்னேஷின் எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
திரைப்பட பாணியில் பெண்ணொருவர் தன் கணவரைக் கொன்று புதைத்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |