கனடாவில் இந்தியர் ஒருவரின் பதறவைக்கும் செயல்: புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்ட அதிகாரிகள்
ரொறன்ரோவில் மசூதி ஒன்றின் மீது வாகனத்தை செலுத்தி தாக்குதல் முன்னெடுத்த நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரொறன்ரோவில் வசிக்கும் இந்தியர்
குறித்த நபர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் யார்க் பிராந்திய பொலிசார் வெளியிட்ட அறிக்கையில்,
@Google Maps
ரொறன்ரோவில் வசிக்கும் இந்தியரான 28 வயது ஷான் கருணாகரன் என்பவர் ரொறன்ரோ மசூதியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது இனவாத ரீதியாக தாக்குதல் நடத்தியுள்ளார் எனவும், மிரட்டல் விடுத்துள்ளார் எனவும், தமது வாகனத்தை அங்கு தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது செலுத்த முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வியாழக்கிழமை மார்க்கமில் உள்ள டெனிசன் தெரு பகுதியில் அமைந்துள்ல மசூதி ஒன்றில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டதாகவும், அந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர் ஷான் கருணாகரன் எனவும் யார்க் பிராந்திய பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஷான் கருணாகரன் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மிரட்டல் விடுத்தது, ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்தியது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது ஆகிய பிரிவுகளில் கருணாகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
@yrp
இஸ்லாமிய வெறுப்புக்கு இடமில்லை
ஏப்ரல் 11ம் திகதி ஜாமீன் வழங்குவதற்கான நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்படும் என்றே கூறப்படுகிறது. இதனிடையே, பெடரல் வர்த்தக அமைச்சர் மேரி Ng தெரிவிக்கையில், ரொறன்ரோ மசூதி மீதான தாக்குதல் சம்பவம் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வன்முறைக்கும் இஸ்லாமிய வெறுப்புக்கும் நமது சமூகத்திலோ அல்லது கனடாவிலோ இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தொடர்புடைய விவகாரம் குறித்து மேலும் விவரங்களை வழங்குவதற்காக திங்கட்கிழமை செய்தியாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக மார்க்கம் இஸ்லாமிய சங்கம் தெரிவித்துள்ளது.