பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர்: ஒரே மாதத்தில் மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைந்தார்
பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர் ஒருவர், ஒரே மாதத்தில் மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைந்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
One in, one out திட்டம்
சிறுபடகுகள் மூலம் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கே திருப்பி அனுப்புவதற்காக பிரித்தானியாவும் பிரான்சும் One in, one out திட்டம் என்னும் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன.

அதன்படி, இதுவரை 40 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி பிரான்சுக்கு அனுப்பப்பட்ட சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ஒருவர், இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 18ஆம் திகதி, சிறுபடகு ஒன்றின்மூலம் மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார். அவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
பிரான்சில் ஆட்கடத்தல்காரர்கள் தன்னை அடிமையாக நடத்தியதாகவும், தன்னை துப்பாக்கியைக் காட்டி கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

ஆகவே, உயிருக்கு பயந்து தான் மீண்டும் பிரித்தானியாவுக்கே ஓடிவந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர் மீண்டும் பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்படுவார் என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |