மணலில் புதைக்கப்பட்டு மரணமடைந்த இளைஞர்: குடும்பத்தினர் விடுத்துள்ள கோரிக்கை
அவுஸ்திரேலியாவில் கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மணலில் புதையுண்டு மரணம்
குயின்ஸ்லாந்தின் பிரிபி தீவு பகுதியிலேயே சனிக்கிழமை குறித்த சம்பவம் நடந்துள்ளது. 23 வயதான ஜோஷ் டெய்லர் என்பவரே மணலில் புதையுண்டு மரணமடைந்தவர்.
Credit: Gofundme
அதிகாரிகள் முன்னெடுத்த முதற்கட்ட விசாரணையில், பன்றி மாமிசம் சமைக்க தோண்டப்பட்ட குழி அது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவிக்குழுவினர் ஹெலிகொப்டர் வசதியை பயன்படுத்தி, இளைஞரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
ஆனால், காயங்கள் காரணமாக இளைஞர் ஜோஷ் டெய்லர் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மரணத்திற்கு காரணமான சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவயிடத்தில் பல எண்ணிக்கையிலான மக்கள் காணப்பட்டதாகவும், அவர்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக குயின்ஸ்லாந்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பிரிஸ்பேனுக்கு வடக்கே 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பிரபலமான பிரிபி தீவு. சம்பவத்தின் போது டெய்லரின் நண்பர்களும் உடனிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சுமார் 15 பேர்கள் கடுமையாக போராடி அந்த குழியில் இருந்து டெய்லரை மீட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
உயிர் காக்கும் கருவிகள்
அதன் பின்னர் வனப்பகுதி அதிகாரிகளில் சிலர் முதலுதவி அளித்துள்ளனர். தொடர்ந்து அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவயிடத்திற்கு வந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
Credit: abcnews
ஆனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த டெய்லரின் உயிர் காக்கும் கருவிகளை வியாழக்கிழமை நீக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
குழிக்குள் விழுந்ததால் ஏற்பட்ட காயங்களில் இருந்து அவர் மீண்டு வருவது கடினமான ஒன்றாக இருக்கும் என்றே மருத்துவர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்படுவதாகவும், இதுவரை 42,000 அமெரிக்க டொலர் வரையில் உதவி கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |