சுவிட்சர்லாந்தில் மீன் உணவொன்றை சாப்பிட்ட நபர் உயிரிழப்பு: அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்
லிஸ்டீரியா எனும் நோய்க்கிருமி பரவல் காரணமாக, 2022ஆம் ஆண்டில் 20 பேர் நோய்வாய்ப்பட்டதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
மீன் உணவு மூலம் பரவிய நோய்த்தொற்று
சுவிஸ் பெடரல் பொது சுகாதார அலுவலகம், பெடரல் உனவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகம் மற்றும் மாகாண, உள்ளூர் அதிகாரிகள் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் லிஸ்டீரியா நோய்க்கிருமி பரவலைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
விசாரணையில், smoked trout என்னும் மீன் உணவு சாப்பிட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகியிருந்தது தெரியவந்தது.
பிரச்சினையின் பின்னாலிருந்த நிறுவனம்
Thurgau மாகாணத்தில் அமைந்துள்ள Kundelfingerhof என்னும் நிறுவனத் தயாரிப்பான மீன் உணவே பிரச்சினைக்குக் காரணம் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
ஆகவே, அந்நிறுவனத்தில் தயாரிப்பு நிறுத்தப்பட்டதுடன், அந்த நிறுவனத்திலிருந்து கடைகளுக்கு விநியோகிக்கப்பட்ட மீன் உணவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அந்த மீன் உணவைச் சாப்பிட்டவர்களில் 20 பேர் பாதிக்கப்பட்டார்கள். அவர்களில் 10 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
பின்னர், நிபுணர்கள் உதவியுடன் Kundelfingerhof நிறுவனத்தின் கட்டுமான அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு, மீன் பதப்படுத்தப்படும் இடம் சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநீக்கம் செய்யப்பட்டு, ஆய்வக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் பணிகள் துவக்கப்பட்டு, உணவு தயாரிப்பு துவக்கப்பட்டுள்ளது.