ஜேர்மனி வங்கியில் கொள்ளை முயற்சி: பிணைக்கைதியாக பிடித்துவைக்கப்பட்ட நபர் பலி
ஜேர்மனியில் வங்கி ஒன்றில் நடந்த கொள்ளை முயற்சியின்போது, பிணைக்கைதியாக பிடித்துவைக்கப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஜேர்மன் வங்கியில் கொள்ளை முயற்சி?
நேற்று வியாழக்கிழமை மதியம், ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள Regensburg என்னும் நகரில் அமைந்துள்ள வங்கி ஒன்றில், ஒருவர் கொள்ளையடிக்க வந்த ஒருவரால் பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.

உடனடியாக பொலிசார் அங்கு விரைந்த நிலையில், உள்ளூர் நேரப்படி சுமார் 3.00 மணியளவில் பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த நபரை பொலிசார் மீட்டுள்ளனர்.
ஆனால், அவர் கத்தியால் தாக்கப்பட்டு ஏற்கனவே படுகாயமடைந்திருந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
வங்கிக்குள் மேலும் இரண்டு பேர் இருப்பதாக தெரியவந்ததையடுத்து வங்கிக்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய பொலிசார் அவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டுவந்துள்ளனர்.
பின்னர், மாலை 6.00 மணி வாக்கில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அந்த நபர் ஒரு ஜேர்மன் குடிமகன். 20 வயதான அவர் தனியாக செயல்பட்டாரா, அவருக்கு வேறு யாரேனும் கூட்டாளிகள் உள்ளனரா என்பதை அறிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |