உதவி கோரி அழைத்த நபர்... நான்கு மரணங்களைத் தவிர்க்கத் தவறிய பொலிசார்: வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்
பிரித்தானியாவில், வீடொன்றில் இரண்டு சிறுமிகளுடன் அவர்களுடைய தந்தையும், அவர்களுடைய உறவினராகிய பெண் ஒருவரும் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட விடயம் தலைப்புச் செய்தியாகியுள்ள நிலையில், நான்கு மரணங்களைத் தவிர்க்கத் தவறியதாக பொலிசார் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட நான்கு பேர்
கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, ஜனவரி 19ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள Norfolk நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றில், Bartlomiej Kuczynski (45) என்பவரும், அவரது மகள்களான Jasmin Kuczynska (12) மற்றும் Natasha Kuczynska (9) ஆகியோரும், அவர்களுடைய உறவினராகிய Kanticha Sukpengpanao (36) என்னும் பெண்ணும் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.
Bartlomiejம் Kantichaவும் கத்தியால் குத்தப்பட்டதால் உயிரிழந்துள்ள நிலையில், பிள்ளைகள் எப்படி உயிரிழந்தார்கள் என்பதை அறிய, இன்று உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
நான்கு மரணங்களைத் தவிர்க்கத் தவறிய பொலிசார்
இந்த துயரச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ள நிலையில், பொலிசார் அந்த மரணங்களைத் தவிர்க்கத் தவறியதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, அதிகாலை 6.00 மணிக்கு முன், Bartlomiej, அவசர உதவி எண்ணான 999ஐ அழைத்துள்ளார். தான் மனக்குழப்பத்தில் இருப்பதாகவும், தனது மன நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக தான் கவலையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவரது அழைப்பை ஏற்ற நபரோ, மருத்துவ உதவியை நாடுமாறு அவருக்கு ஆலோசனை கூறியுள்ளார். Bartlomiej உதவி கோரி அழைத்தும், பொலிசார் உடனடியாக அந்த வீட்டுக்குச் செல்லவில்லை.
ஒரு மணி நேரம் கழித்து, அவ்வழியே தனது நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்ற ஒருவர், அந்த வீட்டில் ஏதோ பிரச்சினை என பொலிசாருக்கு தகவலளித்த பிறகே, 7.15 மணியளவில் பொலிசார் அங்கு சென்றுள்ளனர்.
அவர்கள் அந்த வீட்டை அடைந்தபோது, எல்லாமே முடிந்துவிட்டிருந்தது.
ஆம், அவர்களால் நான்கு உயிரற்ற உடல்களைத்தான் காணமுடிந்தது.
ஆக, முதல் அழைப்பை ஏற்ற உடனே பொலிசார் Bartlomiej வீட்டுக்குச் சென்றிருந்தால், நான்கு விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்பற்றியிருக்க முடிந்திருக்கலாம். ஆனால், அந்த வாய்ப்பை பொலிசார் தவறவிட்டுவிட்டார்கள்.
ஆக, நான்கு மரணங்களைத் தவிர்க்கத் தவறிய பொலிசார் மீது பொலிஸ் நடத்தை குறித்து விசாரிக்கும் அலுவலகம், விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |