சுவிட்சர்லாந்தில் இருந்து 8 ஆண்டுகளுக்கு நாடுகடத்தப்படும் நபர்: வெளிவரும் பின்னணி
சுவிட்சர்லாந்தின் வாலைஸ் மாவட்ட நீதிமன்றம் குடும்ப வன்முறை தொடர்பில் ஒருவரை 8 ஆண்டுகள் நாட்டைவிட்டு வெளியேற தீர்ப்பளித்துள்ளது.
குறித்த 30 வயதான நபர் தமது மனைவியை பல ஆண்டுகளாக உடல் மற்றும் உளவியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். தற்போது அவருக்கு ஒரு வருட கால சிறைவாசமும் கடுமையான அபராதமும் விதிக்கப்பட்டதுடன் நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையிலேயே தனது வருங்கால மனைவியை கண்காணிக்க தொடங்கியுள்ளதாகவும், கட்டுப்பாடுகள் விதித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி பலமுறை குடியிருப்பில் பூட்டி வைத்துள்ளதாகவும், திருமணத்திற்கு பின்னரும் துன்புறுத்தல் தொடர்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், தமது மனைவியை கடுமையாக தாக்குவதுடன், அவரது விருப்பத்துக்கு மாறாக வன்புணர்வுக்கும் உட்படுத்தியுள்ளார்.
ஆனால் திருமண உறவில் வன்புணர்வுக்கு இடமில்லை என்றே நீதிமன்றத்தில் அவர் வாதிட்டுள்ளார். கணவரின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க, தனியாக பிரிந்து சென்ற பின்னரும் அந்த நபர் குறித்த பெண்மணிக்கு தொடர்ந்து தொல்லை அளித்து வந்துள்ளதாகவே கூறப்படுகிறது.
இதனால் உடல் மற்றும் உளவியல் ரீதியாக அவர் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், இதன் காரணமாக மருத்துவ உதவியை நாடும் பரிதாப நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவுக்கு வந்ததையடுத்து குறித்த 30 வயது நபருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், கண்காணிப்பு காலமாக 3 ஆண்டுகளும், நாளுக்கு 90 பிராங்குகள் என 180 நாட்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு 14,000 பிராங்குகள் இழப்பீடு அளிக்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மட்டுமின்றி ஓராண்டு தண்டனை காலம் முடிவடைந்த பின்னர் அவர் 8 ஆண்டுகள் நாட்டைவிட்டு வெளியேறவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தாம் ஏற்பதாக இல்லை என தெரிவித்துள்ள அவர், மாநில நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.