இரண்டாவது முறை கொரோனா தொற்றியதால் உயிரிழந்த நபர்: உலகில் இது மூன்றாவது முறை
ஜேர்மனியில், இரண்டாவது முறை கொரோனா தொற்றியதால் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜேர்மனியைப் பொருத்தவரை இப்படி இரண்டாவது முறை கொரோனா தொற்றிய ஒருவர் உயிரிழப்பது முதல் முறை என்றாலும், உலகில் இது மூன்றாவது நிகழ்வாகும்.
Baden-Württembergஐச் சேர்ந்த அந்த 73 வயது நபருக்கு 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி கொரோனா தொற்றியுள்ளது.
டிசம்பர் மாதம் அவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்றியதைத் தொடர்ந்து, அவருக்கு நிமோனியா முதல் உள்ளுறுப்புக்கள் செயலிழப்பு வரை பல பிரச்சினைகள் ஏற்பட்டு இம்மாதம் அவர் உயிரிழந்துள்ளார்.
அவருக்கு தொற்றியது புதிய திடீர்மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
பொதுவாக கொரோனா தொற்றிய ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்றுவது அபூர்வமே. இந்த நோயாளியைப் பொருத்தவரை, அவருக்கு வேறு பிரச்சினைகள் இருந்திருக்கலாம் என்பதாலும், அவரது உடல் முதல் கொரோனா தொற்றின்போது ஆன்டிபாடிகள் உருவாக்கவில்லை என்பதாலும் அவர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.