சர்ச்சைகளில் சிக்கிய இந்த நபர்தான் சுவிட்சர்லாந்தின் அடுத்த ஜனாதிபதி...
சுவிட்சர்லாந்தின் அடுத்த ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, பெடரல் கவுன்சில் என்ற வெவ்வேறு துறைகளின் தலைவர்களான 7 பேர் கொண்ட குழுதான் நாட்டை ஆண்டு வருகிறது. அந்த குழுவிலுள்ள ஒருவர் சுழற்சி முறையில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார் என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.
இந்த பெடரல் கவுன்சில் உறுப்பினர்களை, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுவிஸ் நாடாளுமன்றம் தேர்வு செய்யும். அவர்களில் ஒருவரை சுவிஸ் ஜனாதிபதியாக இதே சுவிஸ் நாடாளுமன்றம் தேர்வு செய்யும்.
சுவிட்சர்லாந்தின் அடுத்த ஜனாதிபதி இவர்தான்
2023ஆம் ஆண்டுக்கான சுவிஸ் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர், Alain Berset (50).
சர்ச்சைக்குரிய நபர்
பொதுவாக சுவிஸ் ஜனாதிபதிகள் அல்லது சுவிஸ் பெடரல் கவுன்சில் உறுப்பினர்கள் தங்களை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்கள்.
ஆனால், Berset அப்படி அல்ல.
ஒரு பக்கம் சுகாதாரத் துறை Bersetஇன் கட்டுப்பாட்டில் இருந்ததால், கோவிடைக் கையாண்ட விதத்தால் அவர் விமர்சிக்கப்பட்டார். நாட்டை நிர்வகிப்பது சுவிஸ் பெடரல் கவுன்சில் உறுப்பினர்கள் அனைவரும்தான் என்றாலும் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்ததால் அவர் பலிகடா ஆனார்.
Photo by STEFAN WERMUTH / AFP
அவருக்கு அதனால் கொலை மிரட்டல்கள் கூடவிடுக்கப்பட்டன.
இன்னொருபக்கம், திருமணமாகி மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான Berset ஒரு பெண்ணுடன் தவறான உறவு வைத்திருந்ததால் கடும் விமர்சனத்துக்குள்ளானார்.
அத்துடன், இந்த Bersetதான், 2022ஆம் ஆண்டு, ஜூலை மாதம், தனது தனியார் விமானத்தில் பிரான்ஸ் இராணுவ எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.