ஜேர்மன் ரயில் நடத்துனரை தாக்கிக் கொன்ற வெளிநாட்டவர்: 10 ஆண்டுகள் சிறை
ஜேர்மனியில், ரயில் நடத்துனர் ஒருவர், பயணி ஒருவரிடம் அவரது பயணச்சீட்டைக் காட்டுமாறு கேட்க, பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த அந்த பயணி தாக்கியதில் அந்த நடத்துனர் உயிரிழந்துவிட்டார்.
இந்த வழக்கில் அந்த வெளிநாட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரயில் நடத்துனரை தாக்கிய வெளிநாட்டவர்
பிப்ரவரி மாதம் 2ஆம் திகதி, Landstuhl நகருக்கருகில் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்த நிலையில், ரயில் நடத்துனரான சேர்க்கான் கலார் (36) என்பவர், கிரீஸ் நாட்டவரான பயணி ஒருவரிடம் அவரது பயணச்சீட்டைக் காட்டுமாறு கேட்டுள்ளார்.

அந்த 26 வயது நபரிடம் பயணச்சீட்டு இல்லாததால், நடத்துனர் அவரது அடையாள அட்டையைக் கேட்க, அவர் அதற்கும் மறுப்பு தெரிவித்ததால், ரயிலிலிருந்து அவரை இறங்கச் சொல்லியுள்ளார் அந்த நடத்துனர்.
தன்னை ஒரு ‘பாக்ஸர்’ எனக்கூறி மிரட்டிய அந்த கிரீஸ் நாட்டவர், சேர்க்கானை முரட்டுத்தனமாக தாக்கியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேர்க்கான், இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்துவிட்டார்.
10 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கில் அந்த கிரீஸ் நாட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், அவர் அந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.

இந்நிலையில், அவருக்கு 12 ஆண்டுகளுக்குக் குறைந்த தண்டனை வழங்கப்படுமானால், அதை எதிர்த்து தாங்கள் நீதிமன்றம் செல்வோம் என கொல்லப்பட்ட சேர்க்கானின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |