பச்சிளம்குழந்தையுடன் 118 அடி உயரத்திலிருந்து குதித்த தந்தை... திகிலை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி
தெற்கு அவுஸ்திரேலியாவில், தனது ஒன்பது மாதக் குழந்தையுடன் 118 அடி உயர அணையின் சுவரிலிருந்து தந்தை குதித்த செய்தி ஒன்று வெளியாகி திகிலை ஏற்படுத்தியுள்ளது. கிசுகிசுக்கும் சுவர் (Whispering Wall) என்பது அவுஸ்திரேலியாவிலுள்ள ஒரு பிரபல சுற்றுலாத்தலம் ஆகும்.
உண்மையில் அது ஒரு அணையின் சுவர், அந்த சுவரின் சிறப்பு என்னவென்றால், 100 மீற்றர் நீளமுள்ள அந்த அணையின் ஒரு பக்கத்தில் நின்று நீங்கள் லேசாக கிசுகிசுக்கும் குரலில் எதையாவது சொன்னால்கூட, அந்த சுவரின் மறுபுறம் நிற்பவர்களால் அதை தெளிவாக கேட்கமுடியும். ஆகவே, அங்கு சிறுவர்கள் முதல் ஏராளம் சுற்றுலாப்பயணிகள் குவிவதுண்டு.
அப்படித்தான், நேற்று மாலை 4.30 மணியளவில் பலர் கூடியிருந்த ஒரு நிலையில், Henry Shepherdson (38) என்பவர், தன் உடலுடன் பொருத்தப்பட்டிருந்த ஒரு பை போன்ற அமைப்பில் தன் மகளான Kobi என்னும் ஒன்பது மாதக் குழந்தையை வைத்துக்கொண்டு, திடீரென அணையின் சுவரில் ஏறியிருக்கிறார்.
அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அவரிடம் பேசி அவரை சமாதானப்படுத்த முயன்றும், அவர்களுக்கு செவி கொடுக்காமல் குழந்தையுடன் 118 அடி பள்ளத்திற்குள் குதித்திருக்கிறார் Henry.
குழந்தைகள் அலற, பதறிப்போன சிலர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள். இதுபோன்ற சம்பவங்களை அணுகும் சிறப்புப் பயிற்சி பெற்ற அவசர உதவிக்குழுவினர் வந்து பார்க்கும் நேரத்தில் Henry உயிரிழந்துவிட்டிருக்கிறார்.
குழந்தை Kobi சுயநினைவின்றிக் கிடந்திருக்கிறாள். குழந்தையைக் காப்பாற்ற அவசர உதவிக்குழுவினர் முயற்சி மேற்கொண்டும் அவளைக் காப்பாற்ற முடியவில்லை.
15 நிமிட போராட்டத்துக்குப் பின் Kobi உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனைவியைப் பிரிந்த Henryக்கு, குழந்தையை சந்திக்க சட்டப்படி அனுமதியளிக்கப்பட்டும், அவர் ஏற்கனவே ஒரு முறை குழந்தையைக் கடத்த முயன்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நாட்களாகவே Henryக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சினை இருந்துள்ளது. முன்பு ஒரு முறை குழந்தையையும் அதன் தாயையும் கொன்று விடுவதாக மிரட்டியிருக்கிறார் Henry.
இந்நிலையில், தற்போது, குழந்தையையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் Henry. மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ள Kobiயின் தாய், அவளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவளது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த திகில் சம்பவத்தைத் தொடர்ந்து சுற்றுலாத்தலமான Whispering Wall மூடப்பட்டுள்ளது.