பிரித்தானியாவில் தடுப்பூசி போட முயன்ற இந்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி: பகீர் சம்பவத்தின் பின்னணி
பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்ய முயன்ற நபருக்கு, அவர் ஏற்கனவே ஒரு டோஸ் போட்டுக்கொண்டுள்ளதாக பதிவாகியிருந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நபர் தனிப்பட்டமுறையில் தகவல் திரட்டவே, உண்மை பின்னணி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 31 வயதான மெல்வின் தயஸ் என்ற இந்தியர் கடந்த மே மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்ய முயன்றுள்ளார்.
ஆனால் மெல்வின் தயஸ் என்ற பெயரில் ஒருவர் ஏற்கனவே ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை ஆவணங்களில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து, என்ன நடந்தது என்பதை விசாரிக்கத் தொடங்கிய மெல்வின் தயசுக்கு, தமது பெயர் மற்றும் அடையாளங்களை பயன்படுத்தி 30 வயதான ஹர்ஷில் பட்டேல் என்பவர் தடுப்பூசி போட்டுக்கொண்டது தெரிய வந்தது.
விசா காலாவதி முடிந்தும் 7 ஆண்டுகளுக்கும் மேலதிகமாக பிரித்தானியாவில் தங்கியுள்ள ஹர்ஷில் பட்டேல், 31 வயதான மெல்வின் தயஸ் அடையாளத்தை பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்தியாவின் கோவா மாநிலத்தைச் சேர்ந்த மெல்வின் தயஸ் நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். மட்டுமின்றி, போர்த்துகல் நாட்டவரை திருமணம் செய்து கொண்டுள்ளதால், அவருக்கு சட்ட சிக்கல் ஏதுமின்றி தங்க அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஹர்ஷில் பட்டேல் திருமணம் செய்து கொண்டுள்ளதுடன் மெல்வின் தயஸ் பெயரில் வங்கி அட்டைகளும் சாரதிக்கான உரிமமும் கைப்பற்றியுள்ளார்.
மட்டுமின்றி மெல்வின் தயஸ் பெயரில் சுமர் 20 மாத காலம் பணியாற்றி 23,000 பவுண்டுகள் சம்பாதித்துள்ளார். இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் போர்த்துகல் அடையாள அட்டை கோருவதற்காக மெல்வின் தயஸ் ஆவணங்களை சமர்ப்பிக்க, இதே பெயரில் இன்னொருவர் பிரித்தானியாவில் குடியிருப்பதாக கூறி விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர்.
அப்போதே தமது பெயர் மற்றும் அடையாளத்தை இன்னொருவர் பயன்படுத்தி வருவதாக மெல்வின் தயஸ் சந்தேகம் கொண்டுள்ளார். தொடர்ந்து கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்ய முயன்று ஏமாற்றமடையவே தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த வழக்கில் ஹர்ஷில் பட்டேலுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், மெல்வின் தயஸ் பெயரில் ஆவணங்களை தயார்ப்படுத்திக் கொள்ள சுமார் 65,000 பவுண்டுகள் வரையில் ஹர்ஷில் பட்டேல் செலவிட்டிருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஷில் பட்டேல் கிரிக்கெட் பயிற்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.