யுத்தத்தின்போது தன் குடும்பத்தினரைக் காப்பாற்றிய கிராமத்துக்கு பெரும் தொகையை உயில் எழுதி வைத்த நபர்
இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாசிப்படையிடமிருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்றிய பிரெஞ்சுக் கிராமத்துக்கு பெரும் தொகை ஒன்றை உயில் எழுதிவைத்துள்ளார் ஒருவர்.
ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த Erich Schwam என்னும் யூதர், நாசிக்களிடமிருந்து தப்பி ஒரு பதின்ம வயதினராக Le Chambon-sur-Lignon என்ற பிரெஞ்சு கிராமத்தை வந்தடைந்திருக்கிறார். ஆபத்துக்கு தப்பி வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதில் 400 ஆண்டுகளாக பேர் பெற்ற கிராமம் அது. நாசிக்கள் கண்ணில் படாமல் Erich குடும்பத்தை பாதுகாத்திருக்கிறார்கள் அந்த கிராமத்தினர்.
இந்த யூதர்களை காப்பாற்றியதில் Andre Trocme என்ற பாதிரியாரும் அவரது மனைவியான Magdaவும் பெரும் பங்காற்றியுள்ளதாக கூறப்படுகிறது. போர் முடிந்தபின் Erichஇன் பெற்றோர் மீண்டும் ஆஸ்திரியாவுக்கு திரும்பிவிடாலும், Erich மட்டும் Lyon பலகலைக்கழகத்தில் படிப்பதற்காக பிரான்சிலேயே இருந்துவிட்டிருக்கிறார்.
அத்துடன், அங்கேதான் தன் காதல் மனைவியையும் அவர் சந்தித்திருக்கிறார். 2,500 பேர் கொண்ட அந்த கிராமம் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சுமார் 3,000 யூதர்களை பாதுகாத்துள்ளது.
யாராவது யூதர்களுக்கு உதவினால், அவர்கள் நாடுகடத்தப்படலாம் கொல்லவும் படலாம் என்ற நிலையிலும், தன் உயிரையும் காப்பாற்றிய அந்த கிராமத்தின் அன்பை Erich என்றுமே மறக்கவில்லை.
தனது உயிலில், அந்த கிராமத்தின் பள்ளிகள் பயன்பெறும் வகையிலும், கல்வி உதவித்தொகை வழங்குவதற்காகவும், 2.4 மில்லியன் டொலர்களை வழங்குவதாக எழுதிவைத்துள்ளார் Erich.