மகனுக்கு கல்லீரல் தானம் கொடுக்க 60 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்த தந்தை! நெகிழ்ச்சி சம்பவம்
கல்லீரலை தனது குழந்தைக்கு தானமாக கொடுப்பதற்காக வெறும் 2 மாதத்தில் 10 கிலோ எடை குறைத்த தந்தையின் செயல் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.
வினோத நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை
இந்தியாவில் உள்ள மும்பை நகரை சேர்ந்தவர் யோகேஷ் வாஸ். இவர் மனைவி சுப்ரியா. தம்பதிக்கு நிபீஷ் என்ற ஆண் குழந்தை உள்ளான். நிபீஷ் Progressive Familial Intrahepatic Cholestasis என்ற நோயால் பாதிக்கப்பட்டான்.
இந்த பாதிப்பு பிறக்கும்போதே இருந்துள்ளது. இது போன்ற நோய் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு பிறக்கும்போதே கல்லீரல் கோளாறு இருக்கும். மேலும் அவர்களுக்கு பிறக்கும்போதே மஞ்சள் காமாலை நோயும் இருக்கும்.
இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாகும். அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால், குழந்தைக்கு கல்லீரல் செயலிழந்து போய்விடும் அபாயம் உள்ளது. இது குறித்து அவன் பெற்றோரிடம் மருத்துவர்கள் கூறிய நிலையில் சுப்ரியா தனது கல்லீரல் பகுதியை தானம் செய்ய முன் வந்தார்.
ஆனால் அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதால் முடியாமல் போனது. இதையடுத்து நிபீஷ் தந்தை யோகேஷ் தனது கல்லீரலை கொடுக்க சம்மதம் தெரிவித்ததால் அவரையும் சோதனை செய்தனர்.
வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை
அப்போது அவருக்கு உடல் எடை அதிகமாக காணப்பட்டுள்ளது. இதனால் அவரது உடல் எடையை குறைக்க மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளனர். அதன்பேரில் அவர் தொடர்ந்து டயட்டை பின்பற்றி வெறும் இரண்டு மாதத்திலேயே சுமார் 10 கிலோ வரை எடையை குறைத்துள்ளார்.
இதையடுத்து கடந்த அக்டோபர் 16-ம் திகதி Wadia மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது தந்தையும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மருத்துவ அதிகாரி கூறுகையில், PFIC-2 என்பது மிகவும் அரிதான ஒரு நிலையாகும். இது உலகளவில் புதிதாகப் பிறந்த 50,000-1,00,000 குழந்தைகளில் ஒருவரை பாதிக்கிறது. நிபீஷ் 28 நாட்கள் ஐசியூவில் இருந்தான், தற்போது அவன் ஆக்ஸிஜன் உதவியில்லாமலேயே சுவாசிக்கிறான்.
இது இந்த மருத்துவமனையின் முதல் மாற்று அறுவை சிகிச்சை, எனவே நாங்கள் பிரித்தானியாவில் உள்ள பர்மிங்காம் குழந்தைகள் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் டேரியஸ் மிர்சாவின் வழிகாட்டுதல் மற்றும் உதவியை பெற்றோம் என கூறியுள்ளார்.