விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு - முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர்
சவுதி அரேபியா பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சவுதி அரேபியா விபத்து
சவுதி அரேபியாவிற்கு, தெலங்கானா மாநிலத்தில் இருந்து 46 பேர் புனித பயணம் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவில் இவர்கள் பயணித்த பேருந்து, எதிரே வந்த டீசல் லாரி மீது பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த சோயிப் என்பவர் மட்டும் பேருந்து தீ பற்றி எரியும் போது ஜன்னலை உடைத்து குதித்து தப்பியுள்ளார்.
இந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தில் 18 பேர் உயிரிழப்பு
வித்யாநகரைச் சேர்ந்த 35 வயதான சையத் ரஷீத் என்பவர், அவரது தந்தை ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான 65 வயதான ஷேக் நசீருதீன் மற்றும் அவரது 60 வயதான தாயார் அக்தர் பேகம், 38 வயது சகோதரர், 35 வயது மைத்துனி மற்றும் அவர்களது 3 குழந்தைகள் என 18 பேரை இழந்துள்ளார்.

இது குறித்து பேசிய ரஷீத், "இது எனக்கு மிகப்பெரிய இழப்பு. நான் முன்னதாகவே அவர்கள் அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டாம் என எச்சரித்தேன், குறிப்பாக குழந்தைகளுடன். இதுதான் நான் அவர்களை கடைசியாகப் பார்ப்பது என ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை.
என் பேச்சை கேட்டிருந்தால் அவர்களில் சிலராவது உயிர் பிழைத்திருப்பார்கள்"என தெரிவித்துள்ளார். இதே போல், மற்றொரு நபர் தனது குடும்பத்தை சேர்ந்த 5 பேரை இழந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |