கேரளப் பெண்ணை மணந்து வரதட்சிணைக் கொடுமை செய்த நபர்: Blue Corner Notice என்பது என்ன?
கேரளப் பெண்ணை மணந்து வரதட்சிணைக் கொடுமை செய்த நபர் ஜேர்மனிக்கு தப்பியோடிய நிலையில், அவருக்கு இன்டர்போல் Blue Corner Notice வழங்கியுள்ளது.
இந்த Blue Corner Notice என்பது என்ன? என்பது முதலான சில தகவல்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.
திருமணமாகி ஒரே வாரத்தில் வரதட்சிணைக் கொடுமை
கேரளாவிலுள்ள கோழிக்கோடு என்னுமிடத்தைச் சேர்ந்த ராகுல் P கோபால் (29) என்னும் நபர், நேஹா* (26) என்னும் பெண்ணை இம்மாதம், அதாவது, மே மாதம் 5ஆம் திகதி திருமணம் செய்துள்ளார்.
திருமணமாகி ஒரு வாரத்திற்குள் ராகுல் நேஹாவை வரதட்சிணை கேட்டு அடித்து உதைத்தாக நேஹா குடும்பத்தினர் பொலிசில் புகார் செய்துள்ளனர். ஆனால், தன் நண்பர் ஒருவர் உதவியுடன் ராகுல் பெங்களூரு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக ஜேர்மனிக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
அதைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சகத்தின் உதவியுடன் ராகுலைப் பிடிக்க இன்டர்போல் மூலமாக நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது. இன்டர்போல், ராகுல் தொடர்பில் Blue Corner Notice வழங்கியுள்ளது. இன்டர்போல் என்பது, ஒரு சர்வதேச பொலிஸ் ஒத்துழைப்பு அமைப்பாகும்.
Blue Corner Notice என்பது என்ன?
குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கெதிராக Blue Corner Notice வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்டர்போல், தனது கூட்டாளி நாடுகளிடமிருந்து அந்த நபரின் அடையாளங்கள் குறித்த கூடுதல் விவரங்களை சேகரிக்கும். Blue Corner Notice என்பது, குற்றம் சாட்டப்பட்ட நபரின், அடையாளம், அவரது இருப்பிடம் அல்லது குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் தொடர்புடைய கூடுதல் விவரங்களை சேகரிக்க உலக அளவில் விடுக்கப்படும் எச்சரிக்கை ஆகும். குற்றம் சாட்டப்பட்ட நபரைத் தேடும் விடயத்தில், இந்த நோட்டீஸ் மிக முக்கியமான ஒன்றாகும்.
அடுத்த கட்டமாக, ஜேர்மன் அதிகாரிகளால் தங்கள் நாட்டு எல்லைக்குள் ராகுல் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதைப் பொறுத்தே Blue Corner Noticeஇன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும். ராகுலை ஜேர்மன் அதிகாரிகள் கண்டுபிடித்தால், அவரை ஜேர்மனியிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதைத் தொடர்ந்து அவர் இந்தியாவில் விசாரணையை எதிர்கொள்வார்.
*தனியுரிமை கருதி சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |