பிள்ளைகளுடன் 30 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தவரை சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல உத்தரவிட்டுள்ள நீதிமன்றம்
சுவிட்சர்லாந்தில் 30 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்த வெளிநாட்டவர் ஒருவரை, அவரது நாட்டுக்குத் திரும்பிச் செல்லுமாறு சுவிஸ் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
Kosovo நாட்டவரான அந்த 52 வயது நபர், 30 ஆண்டுகளுக்கும் மேல் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்துள்ளார். அவரது பிள்ளைகளும் சுவிட்சர்லாந்தில்தான் பிறந்துள்ளார்கள். ஆனாலும், அவர் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லவேண்டும் என Solothurn மாகாண நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
அந்த நபர் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார். தனது பிள்ளைகளுக்கான செலவுக்கு பணமும் கொடுப்பதில்லையாம் அவர். பல முறை பல்வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு சிறைக்கும் சென்றிருக்கிறாராம்.
10 ஆண்டுகளுக்கு முன்பே, மேலும் கடன் வாங்கினால் அவர் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார் என எச்சரித்தும் அவர் கடன் வாங்குவதை நிறுத்தவில்லையாம். அத்துடன், போக்குவரத்து தொடர்பான குற்றச்செயல் ஒன்றிலும் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஆகவே, அவரது வாழிட உரிமம் புதுப்பிக்கப்படாது என்று கூறியுள்ள நீதிமன்றம், அவர் தனது நாட்டுக்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அவர் தனது பிள்ளைகளுடனும் தொடர்பிலும் இல்லாததால், அவருக்கு சுவிட்சர்லாந்தில் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற விடயமும் அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதற்கு தடையாக இருக்காது என நீதிபதிகள் கூறிவிட்டனர்.