அரசாங்க வேலையை விட்டுவிட்டு... துணிந்து செய்த தொழில்: இன்று அவரது சொத்து மதிப்பு
சிலர் பிராண்டுகளை உருவாக்குகிறார்கள், மிகச் சிலரால் மட்டுமே பல ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாறும் பாரம்பரியத்தை உருவாக்க முடிகிறது.
நிர்மாவின் கதை
கர்சன்பாய் படேல் மற்றும் அவர் உருவாக்கிய நிர்மாவின் கதை, பிராண்டுகள், அவற்றின் மதிப்புகள் மற்றும் மக்களின் வாழ்க்கையில் அவை ஏற்படுத்தும் தாக்கத்தை சுட்டிக்காட்டுகிறது.
கர்சன்பாய் கோடிதாஸ் படேல் 1945 ஆம் ஆண்டு குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள ரூப்பூரில் பிறந்தார். அவரது குடும்பம் விவசாயப் பின்னணியைக் கொண்டிருந்தது. 21 வயதில் பிஎஸ்சி வேதியியலில் பட்டம் பெற்ற கர்சன்பாய், அகமதாபாத்தில் உள்ள நியூ காட்டன் மில்ஸில் ஆய்வக தொழில்நுட்ப பிரிவில் வேலைக்கு சேர்ந்தார்.
பின்னர் குஜராத் அரசின் புவியியல் மற்றும் சுரங்கத் துறைக்கு கர்சன்பாய் மாறினார். 1969 ஆம் ஆண்டு அரசாங்கப் பணியைத் தொடர்ந்து கொண்டே, தனது கொல்லைப்புறத்தில் சோப்புப் பொடியைத் தயாரிக்கும் முயற்சிகளைத் தொடங்கினார்.
அதை வீடு வீடாக சென்று விற்பனையும் செய்து வந்தார். தனது கையால் தயாரிக்கப்பட்ட சோப்புப் பொடியை அந்த காலத்தில் கிலோவுக்கு ரூ.3 என விலை நிர்ணயித்தார்.
தனது மகளின் நினைவாக தனது சோப்புப் பொடிக்கு நிர்மா என்று பெயரிட்டார். அதன் குறைந்த விலை மற்றும் செயல்திறன் காரணமாக குஜராத்தில் அது உடனடியாக பிரபலமடைந்தது.
கர்சன்பாயின் உறுதியும் வணிகத் திறமையும் நிர்மாவின் விரைவான வளர்ச்சிக்கு உந்துதலாக அமைந்தது, இதனால் அவர் தனது அரசாங்க வேலையை விட்டுவிட்டு அகமதாபாத்தில் ஒரு பட்டறையை அமைக்க முடிவு செய்தார்.
சொத்து மதிப்பு ரூ 27,545 கோடி
அத்துடன், முதல் முறையாக ரூ 15,000 கடனாக வாங்கி நிர்மா தொழிற்சாலை ஒன்றையும் உருவாக்கினார். 1970களில், இந்தியாவின் சோப்புப் பொடி சந்தை மதிப்புமிக்க பன்னாட்டு நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.
ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் கர்சன்பாயின் நிர்மா நாடு முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் வளர்ச்சி கண்டது. கர்சன்பாயின் தலைமையின் கீழ், நிர்மா சோப்புகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சிமென்ட் என வளர்ச்சி கண்டது.
அத்துடன், சமையல் உப்பு மற்றும் அழகு சோப்பில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றது. தற்போதும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் இருந்த போதும் நிர்மா சோப்புக்கு 20 சதவிகித சந்தையும் சோப்புப் பொடிக்கு 35 சதவிகிதமும் தொடர்கிறது.
2024 மே மாதம் வெளியான தரவுகளின் அடிப்படையில், கர்சன்பாயின் மொத்த சொத்து மதிப்பு ரூ 27,545 கோடி என்றே கூறப்படுகிறது. 2024ல் வெளியான பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 949வது இடத்தில் கர்சன்பாய் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |