இதுவரை உயிர் பிழைத்த ஐவர்... தாம் ஆறாவது என கூறும் லண்டன் இளைஞர்: அவரின் நொறுங்க வைக்கும் பின்னணி
அவருக்கு NC என அழைக்கப்படும் NUT carcinoma என்ற புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் உறுதி
சில மாதங்கள் மட்டுமே இனி உயிர் வாழ்வதாக மருத்துவர்கள் கூறினாலும், தமது நம்பிக்கையை இழக்கவில்லை.
பிரித்தானியாவில் இன்னும் சில மாதங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என மருத்துவர்களால் கூறப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் தாம் நம்பிக்கையை கைவிடவில்லை என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
லண்டனில் வசிக்கும் 27 வயதான Todd Pattinson என்ற இளைஞரே அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டவர். அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு காதுகள் அடைக்கப்பட்டபோது, தமக்கு என்ன பிரச்சனை என்று தெரிந்துகொள்ள மருத்துவரிடம் சென்றார்.
Image: Todd Pattinson
பல கட்ட சோதனைகளுக்கு பின்னர் அவருக்கு NC என அழைக்கப்படும் NUT carcinoma என்ற புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். மிகவும் அபாயகரமான இந்த புற்றுநோயானது பொதுவாக தலை, கழுத்து மற்றும் நுரையீரலில் காணப்படும்.
சில மாதங்கள் மட்டுமே இனி உயிர் வாழ்வதாக மருத்துவர்கள் கூறினாலும், Todd Pattinson இதுவரை தமது நம்பிக்கையை இழக்கவில்லை. கடந்த ஆண்டு வரையில் மொத்தம் 100 பேர்களில் மட்டுமே இந்த அரியவகை புற்றுநோய் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நுரையீரலில் தமக்கு பாதிப்பு கண்டறியப்பட்டாலும், அது தற்போது அட்ரீனல் சுரப்பிகள் மற்றும் இடுப்புக்கு பரவுதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அடுத்த சில மாதங்கள் அல்லது ஒருசில ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பது சாத்தியம் என மருத்துவர் கூறினாலும், தாம் உயிர் பிழைப்பேன் என்றே நம்புவதாக கூறியுள்ளார்.
நவம்பர் 2ம் திகதி அன்று தனது முதல் சுற்று கீமோதெரபியைத் தொடங்கினார் Todd, மேலும் அவர் சிகிச்சையைத் தொடங்கியவுடன் விரைவில் நோயெதிர்ப்பு சிகிச்சையைத் தொடங்க உள்ளார்.
Image: Todd Pattinson
மட்டுமின்றி கீமோதெரபியால் ஏற்படும் பக்கவிளைவுகளை எதிர்கொள்ள தேவையான உணவுகளை எடுத்துக்கொள்ளவும் அவர் முடிவு செய்துள்ளார். தமக்கு வெறும் 27 வயது தான், அதனால் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறும் Todd, உலகில் இதுவரை ஐவர் மட்டுமே இந்த அரியவகை புற்றுநோயில் இருந்து உயிர் பிழைத்துள்ளனர்.
அவர்கள் வரிசையில் தாம் ஆறாவது நபராக மாற ஆசைப்படுகிறேன் எனவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். மேலும், ஒருமுறை சந்திப்புக்கு 2,400 டொலர் கட்டணம் பெறும் சிறப்பு மருத்துவர் ஒருவரின் சிகிச்சையை நாடவும் Todd முடிவு செய்துள்ளார்.
ஆனால் கட்டணம் மிக அதிகம் என்பதால் பொதுமக்களிடம் இருந்து நிதி வசூலிக்கவும் முடிவு செய்துள்ளார்.
தற்போது வரையில் 5,835 பவுண்டுகள் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், திரட்டப்படும் தொகையில் முழுமையாக சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அல்லது இறுதிச்சடங்குகளுக்கு என ஒதுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.