காவல் நிலையம் புகுந்து பெண் பொலிஸை கொலை செய்த நபர்! அங்கேயே சுட்டுக்கொன்ற அதிகாரிகள்! பிரான்சில் பயங்கரம்
பிரான்ஸ் நாட்டில் காவல் நிலையத்துக்குள் புகுந்து பெண் பொலிஸை குத்திக் கொலை செய்த நபரை அதிகாரிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் அதிகாரிகள் இந்த சம்பவத்தை 'பயங்கரவாத' தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாரிஸ் அருகே Rambouillet நகரத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் நேரப்படி மதியம் 2.20 மணியளவில், திடீரென கத்தியுடன் புகுந்த ஒருவர் Stephanie (49) எனும் பெண் காவல் அதிகாரியை கடுமையாக குத்தி கொலை செய்தார்.
தாக்குதலை தடுக்க முயன்றும் முடியாத நிலையில், அந்த நபரை சம்பவ இடத்திலேயே மற்ற அதிகாரிகள் சுட்டு கொன்றனர். அந்த நபர் சாகும்போது "அல்லாஹு அக்பர்" என கூறியதாக சாட்சிகள் தெரிவித்தன.
தாக்குதல் நடத்தியவர் யார் என்பது குறித்த தகவல் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை. ஆனால், உள்ளூர் ஊடகங்களில் அவர் துனிசியா நாட்டில் பிறந்தவர், வயது 37 என்றும், பிரான்சில் வசித்துவந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பாரிஸ் பிராந்தியத்தின் தலைவர் வலேரி பெக்ரெஸ் (Valerie Pecresse) கூறுகையில், “காவல்துறை பிரான்ஸ் குடியரசின் அடையாளம். அவர்கள் தான் பிரான்ஸ். பிரான்சின் முகமே தற்போது குறிவைக்கப்பட்டுள்ளது” என கூறினார்.
சம்பவ இடத்துக்கே சென்று பார்த்த பிரான்சின் பிரதமர் ஜீன் காஸ்டெஸ் (Jean Castex) "நாடு ஒரு நிஜ கதாநாயகியை இழந்துவிட்டது' என்று வருத்தம் தெரிவித்தார்.
மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது ட்விட்டர் பக்கத்தில் "இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை நாங்கள் என்றும் கைவிட மாட்டோம்" என பதிவிட்டுள்ளார்.