சுவிஸ் வணிகவளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்: வெளியான தண்டனைத் தீர்ப்பு
சுவிட்சர்லாந்தில் வணிக வளாகம் மற்றும் மருத்துவமனை ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததுடன் பணமும் பறித்த நபருக்கு தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ல் Ebikon பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி 40 வயதான குறித்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
தகவலையடுத்து துரிதமாக செயபட்ட பொலிசார், மொத்த மக்களையும் அந்த வணிக வளாகத்தில் இருந்து வெளியேற்றி சல்லடை போட்டு தேடினர். ஆனால் அந்த வணிக வளாகத்தில் இருந்து வெடிகுண்டு எதையும் பொலிசாரால் கைப்பற்ற முடியவில்லை.
இந்த சம்பவம் நடந்த இரு தினங்களுக்கு பிறகு, குறித்த அதே நபர் மருத்துவமனை ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதுடன் 150,000 பிராங்குகள் தொகை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் இரண்டு தவணைகளாக பணம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அந்த நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டபடியே, ரயில் ஒன்றின் கழிவறையில் 100,000 பிராங்குகள் தொகையை பொலிசார் விட்டுச் சென்றனர்.
ஆனால் அந்த நபர் பணத்தை கைப்பற்ற வராத நிலையில், பொலிசார் குறித்த தொகையை மீட்டுள்ளனர். தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் ரயில் நிலையம் ஒன்றில் வைத்தே குறித்த நபரை பொலிசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், அவருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் 12 மாதங்கள் நிபந்தனையற்ற சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு இறுதியல்ல எனவும், குற்றவாளி சார்பில் மேல்முறையீடு முன்னெடுக்கலாம் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.