சுவிட்சர்லாந்தில் முதுகுப்பையை வீசிவிட்டு ஓடிய நபரால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் அழைப்பு
சுவிஸ் நகரமொன்றில், முதுகுப்பையை வீசிவிட்டு ஓடிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வெடிகுண்டு என சந்தேகம்
சுவிட்சர்லாந்தின் Lausanne நகரில், நேற்று காலை 11.00 மணியளவில், திடீரென ஒருவர் முதுகுப்பையை வீசிவிட்டு ஓடுவதைக் கண்ட பொதுமக்களில் ஒருவர், பொலிசாருக்கு தகவலளித்தார்.
அந்த இடத்தில் ஈக்வடார் நாட்டு தூதரகம் வேறு இருந்ததால், பெரும் பரபரப்பு உருவானது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ்களுடன் பொலிசார் அந்த இடத்துக்கு விரைந்தார்கள்.
ரோபோ ஒன்றின் உதவியுடன் அந்த பையை வெடிகுண்டு நிபுணர்கள் ஆராய, அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்ததால் பெரும் நிம்மதி ஏற்பட்டது.
இப்படி ஒரு பரபரப்பை உருவாக்கிய நபரைத் தேடிவரும் பொலிசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.