கனடாவில் மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்தும் பாரிஸ் வெடிகுண்டு தாக்குதல் குற்றவாளி
பாரிஸ் யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்புக்கு தண்டனை பெற்ற நபர் கனடாவில் தொடர்ந்து வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என யூத ஆதரவு அமைப்புகள் கொதித்துப் போயுள்ளன.
யூத ஆதரவு அமைப்புகள்
கடந்த 1980ல் நடந்த இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமானவர் தற்போது 71 வயதாகும் பெய்ரூட்டில் பிறந்த ஹசன் டயப் என்பவரே. தற்போது அவர் கனடாவின் ஒட்டாவா புறநகர் பகுதியில் மகிழ்ச்சியான வாழ்க்கை ஒன்றை முன்னெடுத்து வருகிறார் என்றே யூத ஆதரவு அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
அவர் சட்டத்தை எதிர்கொள்ளாமல் கனடாவில் வசதியான வாழ்க்கை வாழ்ந்துவருவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றே CIJA அமைப்பின் துணைத் தலைவர் Richard Marceau கொந்தளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் டயப்பை பிரான்சுக்கு நாடு கடத்த மறுத்துவிட்டது. ஆனால், அரசாங்கம் மாறினால், டயப் சிக்கலை எதிர்கொள்ளலாம் என்றே நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசியல்வாதியான Pierre Poilievre தமது சமூக ஊடக பக்கத்தில், சட்டத்தை எதிர்கொள்ள அவரை ஏன் பிரான்சுக்கு இன்னும் நாடுகடத்தவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால், தாம் எப்போது வேண்டுமானாலும் நாடுகடத்தப்படலாம் என்ற மனநிலையிலேயே வாழ்ந்து வருவதாக டயபும் தெரிவித்துள்ளார். 1980 அக்டோபர் 3ம் திகதி யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாத குற்றச்சாட்டுகளுக்கு
சம்பவத்தின் போது தாம் பெய்ரூட்டில் பல்கலை தேர்வுகளை எதிர்கொண்டு வந்ததாக டயப் கூறி வந்தாலும், 2008ல் கனடாவில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
2014ல் அவர் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்டு 3 ஆண்டுகள் விசாரணைக் கைதியாக இருந்தார். ஆனால் 2018ல் அவர் மீதான வழக்குகள் கைவிடப்பட்ட நிலையில், அவர் மீண்டும் கனடாவுக்கு திரும்பினார்.
ஆனால், பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஜனவரி 2021 ல் அவர் மீதான வழக்குகள் கைவிடப்பட்டதை ரத்து செய்து, அத்துடன் டயப்பை விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட்டது.
பிரான்ஸ் திரும்ப டயப் மறுத்ததை அடுத்து, அவர் ஆஜராகாத நிலையில் 2023 ஏப்ரல் 21ம் திகதி பயங்கரவாத குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்று ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.
மட்டுமின்றி சர்வதேச கைதாணையும் அவர் மீது விநியோகிக்கப்பட்டது. இந்த நிலையில் கனடாவில் உள்ள டயப் ஆதரவு குழுவானது அவர் மீதான வழக்குகள் போதிய ஆதாரமற்றவை என்றும் 2023ல் அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்பது போலியான விசாரணையால் ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |