லண்டன் பூங்காவில் ஆசிரியையை கொலை செய்தவர் இவர்தான்! புகைப்படத்துடன் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்
லண்டனை உலுக்கிய ஆசிரியை சபீனா நெஸ்ஸா கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் புகைப்படம் மற்றும் பெயர் உள்ளிட்ட தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 17-ஆம் திகதி, லண்டனின் தென்கிழக்கு பகுத்தியில் Kidbrooke பகுதியில் உள்ள Cator பூங்காவில், இளம் ஆசிரியை சபீனா நெஸ்ஸா அடையாளம் தெரியாத நபரால் கொல்லப்பட்டார். அவரது சடலம் மறுநாள் காலை கண்டெடுக்கப்பட்டது.
லண்டன் மாநகரையே பெரும் தாக்கத்துக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, சிசிடிவி வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், சென்ற ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் 38 வயதான நபர் கைது செய்யப்பட்டார்.
தற்போது, அந்த நபரின் புகைப்படம் மற்றும் பெயர் விவரங்களை லண்டன் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அவர் கிழக்கு சசெக்ஸின் ஈஸ்ட்போர்னைச் சேர்ந்த கோசி செலமாஜ் (Koci Selamaj) என்றும், அவர் டொமினோ பிஸ்ஸா உணவகத்தின் முன்னாள் டெலிவரி டிரைவர் என்றும் தெரிவித்தனர்.
அவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கடலோர நகரத்தில் கைது செய்யப்பட்டார் என்றும் அப்போது அவர் பயன்படுத்திய சில்வர் நிற நிசான் மைக்ரா காரையும் கைப்பற்றியதாக தெரிவித்தனர்.
மேலும், அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வில்லஸ்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவித்தனர்.


