மனைவியுடன் இணைந்துகொள்வதற்காக கனடா சென்ற இந்தியர்: வெளியாகியுள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி
கனடாவில் கல்வி கற்கச் சென்ற மனைவியுடன் இணைந்துகொள்வதற்காக கனடா சென்ற இந்தியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
திருமணமான ஒரே மாதத்தில் கனடா சென்ற மனைவி
இந்தியாவின் பஞ்சாபிலுள்ள ஜலந்தர் நகரைச் சேர்ந்த ககன்தீப் கில் (Gagandeep Gill) என்பவருக்கும், ஷாமி (Shami) என்ற பெண்ணுக்கும் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
அடுத்த மாதமே, மாணவர் விசாவில் கனடா புறப்பட்டுள்ளார் ஷாமி. இந்நிலையில், மனைவியுடன் இணைந்துகொள்வதற்காக இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி, கனடா புறப்பட்டுள்ளார் ககன்தீப். நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கி 30 லட்ச ரூபாய் செலவு செய்து மகனை கனடா அனுப்பியுள்ளார்கள் ககன்தீப்பின் பெற்றோர்.
கிடைத்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி
கனடா சென்ற ககன்தீப், கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது, செப்டம்பர் 10ஆம் திகதி, தன் தாயை தொலைபேசியில் அழைத்துள்ளார். தனக்கு தூக்கம் தூக்கமாக வருவதாக தன் தாயிடம் தெரிவித்துள்ளார் அவர். இந்தியாவிலிருந்து சென்றதால், கனடா நேரத்துடன் அட்ஜஸ்ட் செய்துகொள்ள அவருக்கு நேரம் தேவைப்படுகிறது என்று நினைத்துள்ளார்கள் அவரது பெற்றோர்.
ஆனால், மறுநாள், அதாவது செப்டம்பர் 11ஆம் திகதி, திங்கட்கிழமை, அதிகாலை 2.30 மணியளவில் கனடாவிலிருந்து ககன்தீப்பின் குடும்பத்துக்கு மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அழைத்தவர், ககன்தீப் உயிரிழந்துவிட்டதாக கூற, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். என்ன ஆயிற்று, திடீரென மகன் உயிரிழக்க என்ன காரணம் என எந்த விடயமும் தெரியாமல் ககன்தீப்பின் பெற்றோர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ஏற்கனவே மகனை கனடா அனுப்புவதற்காக கடன் வாங்கி பெரும் செலவு செய்துள்ள நிலையில், தற்போது மகன் உயிரிழந்துவிட்டதால், கையில் பணமும் இல்லாமல், மகனுடைய உடலை இந்தியா கொண்டுவருவதற்கு இந்திய அரசின் உதவியை நாடியுள்ளார்கள் ககன்தீப்பின் பெற்றோர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |