ஜாக்கெட் பாக்கெட்டில் வைத்த லொட்டரிச்சீட்டை மறந்த ஜேர்மானியர்: சமீபத்தில் கிடைத்த இன்ப அதிர்ச்சி
குளிருக்குப் பயன்படுத்தும் ஜாக்கெட் ஒன்றை சமீபத்தில் எடுத்த ஜேர்மானியர் ஒருவர், அதன் பாக்கெட்டில் ஒரு லொட்டரிச்சீட்டு இருப்பதைக் கவனித்துள்ளார்.
அந்த லொட்டரிச்சீட்டு அவரை கோடீஸ்வரராக்கியுள்ளது!
லொட்டரிச்சீட்டை மறந்த ஜேர்மானியர்
மார்ச் மாதம் லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார் ஜேர்மானியர் ஒருவர். அதை அவர் குளிருக்காக பயன்படுத்தும் தனது ஜாக்கெட்டின் பாக்கெட்டில் வைத்துள்ளார்.
பிராங்பர்ட்டில் வாழும் அவர், கோடை வந்ததால் அந்த ஜாக்கெட்டை மடித்து பீரோவுக்குள் வைத்துவிட்டார்.
இப்போது குளிர் துவங்கியுள்ளதால் மீண்டும் தனது ஜாக்கெட்டை எடுத்த அவர் தற்செயலாக அதன் பாக்கெட்டில் கையை விட, அவர் கையில் அந்த லொட்டரிச்சீட்டு தட்டுப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அந்த லொட்டரிச்சீட்டை விற்பனை செய்த லோட்டோ பிராங்பர்ட் என்னும் நிறுவனம், பரிசு பெற்ற நபரைத் தேடிக்கொண்டிருந்திருக்கிறது.
ஒவ்வொருமுறையும் ரேடியோவில் பரிசுப்பணத்தை வந்து வாங்கிக்கொள்ளாத அந்த நபரைக் குறித்து அறிவிப்பு வெளியாகும்போதெல்லாம், இப்படி ஒரு முட்டாள் இருக்கமுடியுமா என்று நினைப்பாராம் அவர்.
ஆனால், அது தானாக இருக்கும் என நினைக்கவேயில்லை என்கிறார் அவர்.
ஆம், அவர் மறந்து தனது ஜாக்கெட்டின் பாக்கெட்டில் வைத்திருந்த அந்த லொட்டரிச்சீட்டுக்கு 15.3 மில்லியன் யூரோக்கள் பரிசு விழுந்துள்ளது.
15.3 மில்லியன் யூரோக்கள் என்பது இலங்கை மதிப்பில் 5,42,59,92,000.00 ரூபாய் ஆகும்.
ஆக, ஒரே நாளில் பெரும் கோடீஸ்வரராகிவிட்ட அவரிடம், இந்தப் பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டால், வீட்டுக்கு ஒரு சோபா வாங்கவேண்டும் என்கிறார்.
பெயர் வெளியிட விரும்பாத அவரும் அவரது மனைவியும், தங்கள் பரிசுப்பணத்தை தங்கள் பிள்ளைகளுக்காக செலவிட திட்டம் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |