1,00,000 இருக்கைகள், 2 பில்லியன் பவுண்டுகள் முதலீடு! பிரித்தானியாவில் மிகப்பெரிய கால்பந்து அரங்கம்
பிரித்தானியாவில் மான்செஸ்டர் யுனைடெட் 1,00,000 இருக்கைகள் கொண்ட பிரம்மாண்ட மைதானம் கட்ட திட்டமிட்டுள்ளது.
பிரித்தானியாவில் பிரமாண்ட மைதானம்
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப், பிரித்தானியாவில் மிகப்பெரிய கால்பந்து மைதானத்தை உருவாக்கும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த பிரம்மாண்ட திட்டம், 1,00,000 இருக்கைகள் கொண்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய மைதானத்தை வெளிப்படுத்துகிறது.
Foster + Partners/PA
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிளப்பின் சிறுபான்மை உரிமையாளராக பொறுப்பேற்ற Sir Jim Ratcliffe, உலகத்தரம் வாய்ந்த கால்பந்து அரங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற தனது தொலைநோக்கு பார்வையுடன் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார்.
புதிய மைதானம் கட்ட முடிவு
வரலாற்று சிறப்புமிக்க ஓல்ட் ட்ராஃபோர்ட்(Old Trafford) மைதானத்தை புதுப்பிப்பதை விட, தற்போதுள்ள மைதானத்திற்கு அருகிலேயே முற்றிலும் புதிய மைதானத்தை கட்ட மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த புதிய மைதானம், 90,000 இருக்கைகள் கொண்ட வெம்ப்ளி(Wembley) மைதானத்தை விட பெரியதாக இருக்கும் என்றும், இது பிரித்தானியாவின் கால்பந்து மைதான வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகப்புகழ் பெற்ற கட்டிடக் கலைஞர்கள்
உலகப்புகழ் பெற்ற கட்டிடக் கலை நிறுவனமான ஃபாஸ்டர் + பார்ட்னர்ஸ் இந்த மைதானத்தை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.
பாஸ்டர் + பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் லார்ட் நார்மன் பாஸ்டர் கூறுகையில், "முன் தயாரிப்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த மைதானத்தின் கட்டுமானத்தை ஐந்து ஆண்டுகளில் முடிக்க முடியும்" என்று கூறியுள்ளார்.
Foster + Partners/PA
வேலை வாய்ப்புகள் உருவாக்கம்
மான்செஸ்டர் யுனைடெட் கிளப் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இந்த திட்டம் பிரித்தானியாவின் பொருளாதாரத்தில் பில்லியன் கணக்கான பவுண்டுகளை முதலீடு செய்யும் என்றும், சுமார் 92,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், 17,000 க்கும் மேற்பட்ட புதிய வீடுகளை கட்ட உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தின் மதிப்பிடப்பட்ட செலவு £2 பில்லியன் ஆகும், மேலும் இதற்கான முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் என்றும் மான்செஸ்டர் யுனைடெட் தலைமை நிர்வாக அதிகாரி உமர் பெராடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Foster + Partners/PA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |