தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட பாலியல் குற்றவாளி: லண்டனில் தேடுதல் வேட்டை தீவிரம்
பிரித்தானியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளி தவறுதலாக விடுவிக்கப்பட்டதை அடுத்து அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தவறுதலாக விடுவிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி
எசெக்ஸ் பகுதியில் பள்ளி சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக புகலிட கோரிக்கையாளரான எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த 41 வயது ஹதுஷ் கேபது(Hadush Kebatu) தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சில வாரங்களிலேயே ஹதுஷ் கேபது வெள்ளிக்கிழமை தவறுதலாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலின் படி, 12 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியான ஹதுஷ் கேபது நாடு கடத்தப்படுவதற்காக HMP Chelmsford சிறையில் இருந்து குடியேற்ற தடுப்பு காவலுக்கு மாற்றப்பட இருந்தார்.
இந்நிலையில், நிர்வாக பிழை காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் லண்டனில் தற்போது தலைமறைவாக இருப்பதாக நீதித்துறை செயலாளர் டேவிட் லேமி உறுதிப்படுத்தியுள்ளார்.
தேடுதல் வேட்டை தீவிரம்
இந்நிலையில் தப்பிச் சென்று தலைமறைவாக உள்ள ஹதுஷ் கேபது-வை பிடிக்க மெட்ரோபொலிட்டன் பொலிஸார், போக்குவரத்து காவல்துறை மற்றும் எசெக்ஸ் பொலிஸார் என பல துறைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஹதுஷ் கேபது கட்டாயம் பிடிக்கப்பட்டு அவரது குற்றங்களுக்காக நாடு கடத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தவறுதலான விடுதலை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கண்டித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |