காசநோய் பாதித்த பெண்ணை சிறையில் அடைத்த அதிகாரிகள்: கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
கனேடிய மாகாணமொன்றில், காசநோய் பாதித்த பெண்ணொருவரை அதிகாரிகள் சிறையில் அடைத்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசநோய் பாதித்த பெண்ணை சிறையில் அடைத்த அதிகாரிகள்
கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் வாழும் ஜெரால்டைன் மேசன் (Geraldine Mason, 36), அக்டோபர் மாதம் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் குற்றம் எதுவும் செய்யவில்லை. அவருக்கு காசநோய் (tuberculosis) தாக்கியிருந்தது. அவர் ஒழுங்காக மருந்து எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறி, அவரை சிறையில் அடைத்துள்ளார்கள்.
சிறையில், பலமுறை உடை களையப்பட்டு சோதிக்கப்பட்டு, பயங்கர குற்றவாளிகளுக்கிடையே, என்ன செய்வது, யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல், பயத்துடன் நாட்களை செலவிட்டுவந்துள்ளார் மேசன்.
பிரீமியர் அதிரடி நடவடிக்கை
மேசன் குறித்து கேள்விப்பட்ட மனித்தோபா பிரீமியரான Wab Kinew, உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
காசநோய் பாதித்த யாரையும் இனி சிறையில் அடைக்கக்கூடாது என அவர் பிறப்பித்த ஆணை நேற்றே கையெழுத்தும் ஆகிவிட்டது.
அவர் ஆணை பிறப்பித்ததைத் தொடர்ந்து நேற்று மேசன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
தான் சிறையில் அவதியுற்ற நிலையில், இனி காசநோய் பாதிக்கப்பட்ட யாரும் சிறையில் அடைக்கப்படமாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளதால் தான் மகிழ்ச்சியடைவதாக மேசன் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், மேசன் தினமும் ஒழுங்காக மருந்து எடுத்துக்கொள்வதை உறுதி செய்வதற்காக, மருத்துவ ஊழியர் ஒருவர் அவரை ஃபேஸ்டைமில் சந்திக்கவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |