நான் தவறாக பேசவில்லை! திரிஷா மீது வழக்கு தொடர வேண்டும் - மன்சூர் அலி கான்
நடிகர் மன்சூர் அலி கான் நடிகை திரிஷா குறித்து தவறாக பேசவில்லை என்றும், நடிகர் சங்கம் தமது அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலி கான் ஆபாசமாக பேசிய வீடியோ வைரலானது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
அதனைத் தொடர்ந்து பல தரப்பில் இருந்தும் மன்சூர் அலி கானுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. நடிகர் சங்கமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
மன்சூர் அலி கான் இதற்கு விளக்கம் அளித்து பதிவிட்ட நிலையில் தற்போது மீண்டும் திரிஷாவின் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர், 'ஒரு நடிகனின் கதாபாத்திரமாகத்தான் நான் அந்த காட்சியை சாதாரணமாக சொன்னேன். தவறாக ஏதும் குறிப்பிடவில்லை. திரிஷா நல்ல நடிகை. அவர் கோபப்பட்டு பேசியுள்ளார். அடுத்த படத்தில் நாங்கள் இணைந்து நடிப்போம்!' என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், 'திரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும். நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது.
என்னிடம் விளக்கம் கேட்காமலேயே தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. மக்களுக்கு நான் யார் என்று தெரியும். பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் பெண்களை பற்றி மிகவும் அவதூறாக பேசினார். அது தொடர்பாக எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
நீட் தேர்வால் அனிதா என்ற மாணவி உயிரை மாய்த்துக்கொண்டபோது எந்த மகளிர் சங்கமும் போராடவில்லை. நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையை 4 மணிநேரத்தில் உடனடியாக திரும்பப்பெற வேண்டும். என்னிடம் முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். எல்லோரையும் உசுப்பேற்றிவிட்டு எனக்கு எதிராக பேச வைக்கிறார்கள். லோகேஷ் கனகராஜுக்கு இந்த விவகாரம் பற்றி எதுவும் தெரியாது' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |