புலம்பெயர்வோர் ஜேர்மனியில் பணியாற்றுவதை எளிதாக்க முன்வைக்கப்பட்டுள்ள யோசனை: அமுல்படுத்தப்பட்டால் பல நன்மைகள் நிகழலாம்...
ஜேர்மனியில் பல துறைகளில் இன்னமும் கடும் பணியாளர் தட்டுப்பாடு நிலவுகிறது. பல நாடுகளில் வேலையில்லாத மக்கள் இருக்கிறார்கள். புலம்பெயர்வோருக்கு வரவேற்பு இருந்தும் பணியாளர் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை.
அதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று?
நாமும் நீண்ட நாட்களாக ஜேர்மனியின் பணியாளர் தட்டுப்பாடு குறித்த செய்திகளை ஒருபக்கமும், வேலையில்லாமல் தவிப்பவர்களைப் பற்றிய செய்திகளை மறுபக்கமும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.
ஜேர்மனியும் புலம்பெயர்தலை எளிதாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறிக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. அதற்கு ஒரு முக்கியக் காரணம் மொழிப்பிரச்சினை.
நம்மில் பலர் இந்த விடயம் குறித்து யோசித்திருப்போம். புலம்பெயர அனுமதித்தால் போதுமா, புதிய நாடு ஒன்றிற்குச் சென்று அங்கு பணி செய்ய அவர்களுடைய மொழி நமக்குத் தெரியவேண்டுமே என பலரும் கருதியிருக்கக்கூடும்.
தற்போது இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் வகையில், அருமையான யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார் ஜேர்மன் அரசியல்வாதி ஒருவர்.
ஜேர்மன் அரசியல்வாதி முன்வைத்துள்ள அருமையான யோசனை
நடைமுறைப் பிரச்சினைகளை அழகாகப் புரிந்துகொண்டுள்ள, ஆளுங்கட்சி கூட்டணியிலுள்ள Free Democratic party கட்சியின் அரசியல்வாதியான Johannes Vogel, பிரச்சினைகளைத் தீர்க்க அருமையான யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அது என்னவென்றால், ஜேர்மனி அறிமுகம் செய்ய இருக்கும் கிரீன் கார்டைப் பெறுவதற்கு ஜேர்மன் மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதுதான். அதாவது, ஜேர்மன் மொழி பல நாடுகளில் பேசப்படும் ஒரு மொழி அல்ல. ஆகவே, ஜேர்மன் மொழிப் புலமை இல்லையென்றாலும் புலம்பெயர்ந்தோருக்கு அந்த கிரீன் கார்டு கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்கிறார் Johannes Vogel.
அதாவது, ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு பணி கிடைக்க வழி செய்யவேண்டும், புலம்பெயர்ந்தோர் பதிவு செய்யும் அலுவலகங்களிலும் ஆங்கிலத்தில் விண்ணப்பப் படிவங்களும், ஆங்கிலம் நன்கு தெரிந்த அலுவலர்களும் இருக்கவேண்டும் என்கிறார் Johannes Vogel.
Johannes Vogelஇன் யோசனை ஏற்றுக்கொள்ளப்படுமானால், அது பல நாட்டவர்களுக்கு ஜேர்மனியில் பணி செய்யும் வாய்ப்புக் கிடைக்கவும், அத்துடன், ஜேர்மன் பொருளாதாரம் முன்னேறவும் வழிவகை செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.