ஜேர்மனியில் வாழ்பவர்களில் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா?
ஜேர்மனியில் வாழ்பவர்களில் கால்வாசிக்கும் அதிகமானவர்கள் புலம்பெயர்தல் பின்னணிகொண்டவர்கள்தான்.
புள்ளியியல் துறை தெரிவித்துள்ள தகவல்
பெடரல் புள்ளியியல் துறையின் தரவுகளின்படி, ஜேர்மன் மக்கள்தொகையில் 27.5 சதவிகிதத்தினர் புலம்பெயர்தல் பின்னணிகொண்டவர்கள் ஆவர்.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, 1950கள் முதல் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்த சுமார் 14.2 மில்லியன் மக்கள், 2021 இறுதிவரை ஜேர்மனியில் வாழ்ந்துவருவது தெரியவந்துள்ளது.
இதுவே ஜேர்மன் மக்கள்தொகையில் 17.3 சதவிகிதம் ஆகிவிடுகிறது. இதுபோக, அவர்களுக்கு ஜேர்மனியில் பிறந்த பிள்ளைகளையும் சேர்த்தால், ஜேர்மனியில் வாழும் புலம்பெயர்ந்த பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை எங்கேயோ போய்விடுகிறது.
மேலும், இன்னொரு 4.7 மில்லியன் மக்கள், அதாவது ஜேர்மன் மக்கள்தொகையில் சுமார் 5.7 சதவிகிதம் பேர், இந்த புலம்பெயர்ந்தோருக்கு ஜேர்மனியில் பிறந்தவர்கள்.
ஆக, இந்தக் கணக்குப்படி, ஜேர்மனியின் மக்கள்தொகையில் 23 சதவிகிதம்பேர், அதாவது, கிட்டத்தட்ட கால்வாசிப்பேர் புலம்பெயர்தல் பின்னணிகொண்டவர்கள்.
இதுபோக ஜேர்மனியில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் ஜேர்மானியர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட புலம்பெயர்தோருக்கு பிறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு 3.7 மில்லியன். அதாவது, மக்கள்தொகையில் 4.5 சதவிகிதம்.
ஆக மொத்தத்தில், ஜேர்மன் மக்கள்தொகையில் 27.5 சதவிகிதத்தினர் புலம்பெயர்தல் பின்னணிகொண்டவர்கள் ஆவர்.
Photo: picture alliance/dpa | Annette Riedl