லண்டனில் பள்ளி மாணவ மாணவிகள் பலர் மருத்துவமனையில் அனுமதி... மிட்டாயில் கஞ்சா கலப்பு: பெற்றோருக்கு பொலிஸ் எச்சரிக்கை
லண்டனில் கஞ்சா கலந்த மிட்டாயை சாப்பிட்ட பள்ளி மாணவ மாணவியர் பலர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு லண்டனிலுள்ள Sutton பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில், மாணவிகள் சிலர் திடீரென வாந்தி எடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பலர் உடல் நலம் பாதிக்கப்படவே, அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில், அவர்கள் கஞ்சா கலந்த மிட்டாய்களை உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
பார்ப்பதற்கு சாதாரண மிட்டாய்கள் போல் காணப்படும் அந்த மிட்டாய்களில் கஞ்சா கலக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த மிட்டாயை சாப்பிடும்போது, கஞ்சா புகைக்கும்போது என்ன விளைவுகள் ஏற்படுமோ, அதே விளைவுகள் ஏற்படுமாம். ஆக, அந்த மிட்டாயை சாப்பிட்டவர்களில் பலருக்கு, வாந்தி மற்றும் திடீர் அதிர்ச்சி ஆகிய பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன.
ஆகவே, பொலிசார் இது தொடர்பாக பெற்றோருக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.
அவர்கள் விடுத்துள்ள அறிகையில், பார்ப்பதற்கு சாதாரண மிட்டாய் போல் காணப்படும் இந்த கஞ்சா மிட்டாய்களை சாப்பிடும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
Suttonஇலுள்ள பள்ளி ஒன்றில் இந்த மிட்டாயை சாப்பிட்ட பல மாணவ மாணவிகள் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆகவே, இவ்வகை மிட்டாய்கள் புழங்குவதைக் கண்டால் உடனே பொலிசாருக்கு தகவலளியுங்கள் என பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கஞ்சாவை போதைக்காக பயன்படுத்துவது சட்ட விரோதம் என்பது குறிப்பிடத்தக்கது.

