புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியை விமர்சித்த ஜேர்மனி: அமெரிக்க தரப்பு வார்த்தை மோதல்
ஜேர்மனியில் வலதுசாரிக் கட்சி ஒன்று புலம்பெயர்ந்தோரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதாக ஜேர்மன் உளவுத்துறை தெரிவித்திருந்தது. அதற்கு அமெரிக்காவிலிருந்து எதிர்ப்பு வந்துள்ளது!
வலதுசாரிக் கட்சி மீது குற்றச்சாட்டு
ஜேர்மன் உளவுத்துறை ஏஜன்சியான BfV, வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி தீவிரக் கொள்கைகள் கொண்ட ஒரு கட்சி என தெரிவித்துள்ளது.
அக்கட்சி தொடர்பில் மேற்கொண்ட விரிவான ஆய்வைத் தொடர்ந்து, AfD கட்சியின், மக்கள் குறித்த இனம் மற்றும் வம்சாவளி அடிப்படையிலான கருத்து, சுதந்திரமான ஜனநாயக ஒழுங்கிற்கு ஏற்புடையதாக இல்லை என BfV தனது அறிக்கையில் கூறியுள்ளது.
சில குறிப்பிட்ட மக்கள் குழுக்களை சமூகத்தில் சமமாகப் பங்கேற்பதிலிருந்து விலக்குவதும், அரசியலமைப்பை மீறும் வகையில் அவர்களை நடத்துவதும், அதன் மூலம் அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதும் அக்கட்சியின் நோக்கமாகும் என்றும் BfV கூறியுள்ளது.
அமெரிக்க தரப்பு வார்த்தை மோதல்
ஜேர்மன் உளவுத்துறையின் அறிக்கையை, அமெரிக்க மாகாணச் செயலரான மார்க்கோ ரூபியோ (Marco Rubio) கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமூக ஊடகமான எக்ஸில் அவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஜேர்மனி, எதிர்க்கட்சிகளை கண்காணிக்க தனது உளவுத்துறைக்கு அதிகாரம் அளித்துள்ளது. இது ஜனநாயகம் அல்ல, இது மாறுவேடத்திலிருக்கும் கொடுங்கோலாட்சி என விமர்சித்துள்ளார்.
அத்துடன், வலதுசாரிக் கட்சியான AfD கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள ரூபியோ, உண்மையில் AfD கட்சி தீவிரக் கருத்துக்கள் கொண்ட கட்சி அல்ல என்றும், அக்கட்சி எதிர்ப்பது ஜேர்மன் அரசின் அபாயகரமான புலம்பெயர்தல் கொள்கைகளைத்தான் என்றும், ஜேர்மனி தன் கொள்கைகளை மாற்றிக்கொள்ளவேண்டும் கூறியுள்ளார்.
ஜேர்மனியின் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காத ஜேர்மன் வெளியுறவு அலுவலகம், உடனடியாக சுடச்சுட ரூபியோவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
German foreign ministry has responded to Marco Rubio comments on German courts rulings on the AFD. pic.twitter.com/vKFxfcFn8x
— WarMonitor🇺🇦🇬🇧 (@WarMonitor3) May 2, 2025
ரூபியோவின் இடுகைக்கு நேரடியாக பதிலளித்துள்ள ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம், இதுதான் ஜனநாயகம், இது முழுமையான மற்றும் சுதந்திரமான விசாரணையின் அடிப்படையில், எங்கள் அரசியல் சாசனத்தையும் சட்டத்தின் விதியையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவு.
இந்த விடயத்தில் நீதிமன்றங்கள் தங்கள் கடைசி முடிவை எடுக்கும். எங்கள் வரலாற்றிலிருந்து, வலதுசாரி தீவிரத்தன்மை நிறுத்தப்படவேண்டும் என நாங்கள் பாடம் கற்றுள்ளோம் என்றும் கூறியுள்ளது வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |