கனடாவிற்கு புதிய பிரதமர் தெரிவு... ட்ரம்புடனான வர்த்தகப் போரில் வெற்றி பெற சபதம்
கனடாவின் அடுத்த பிரதமராக பதவியேற்பதற்கான போட்டியில் மார்க் கார்னி வெற்றி பெற்றுள்ளார்.
கனடாவே வெல்லும்
கடுமையான சூழலில் கனடாவின் பிரதமராக பொறுப்பை ஏற்கவிருக்கும் மார்க் கார்னி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான வர்த்தகப் போரில் வெற்றி பெறுவதாக சபதம் செய்துள்ளார்.
லிபரல் கட்சியின் தலைமைப் போட்டியில் கனடா மற்றும் இங்கிலாந்து மத்திய வங்கிகளின் முன்னாள் ஆளுநரான மார்க் கார்னி மூன்று போட்டியாளர்களை வீழ்த்தி, கனடாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார்.
59 வயதான கார்னி தமது முதல் வெற்றியுரையில், ஜனாதிபதி ட்ரம்பை கடுமையாக விமர்சித்துள்ள அவர், அமெரிக்கர்கள் எந்த தவறும் செய்யக்கூடாது, அது வர்த்தகமாக இருந்தாலும் ஹொக்கி ஆட்டமாக இருந்தாலும் கனடாவே வெல்லும் என்றார்.
வரும் நாட்களில் கார்னி பிரதமராகப் பதவியேற்பார் என்றும், அடுத்த பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியை வழிநடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட பத்தாண்டு கால பதவிக்குப் பிறகு ட்ரூடோ ராஜினாமா செய்த நிலையில், ஜனவரி மாதம் லிபரல் கட்சியின் தலைமைப் போட்டி தொடங்கியது.
வீட்டுவசதி நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் விரக்தியடைந்த வாக்காளர்களிடையே கடும் செல்வாக்கின்மை காரணமாக ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ய கட்சிக்குள் அழுத்தத்தை எதிர்கொண்டார்.
கனடா அனுமதிக்காது
உண்மையில், இந்த அரசியல் நெருக்கடி என்பது அமெரிக்க உளவுத்துறையின் சதியாக இருக்கலாம் என்ற கருத்தும் கனேடிய மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த முதல் வாக்குப்பதிவில் கார்னி தமது வெற்றியைப் பதிவு செய்தார்.
85.9 சதவிகித வாக்குகளைப் பெற்று தனது நெருங்கிய போட்டியாளரான முன்னாள் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்டை வீழ்த்தினார். நாடாளுமன்றத்தில் சிறுபான்மை அரசாங்கத்தை வழிநடத்தவிருக்கும் கார்னி, ஒரு திடீர் பொதுத் தேர்தலை தானே நடத்தலாம் அல்லது எதிர்க்கட்சிகள் இந்த மாத இறுதியில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு ஒன்றை முன்னெடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தமது வெற்றியுரையில் ஜனாதிபதி ட்ரம்பை கடுமையாக விமர்சித்துள்ள கார்னி, ஜனாதிபதி ட்ரம்ப் கனேடிய தொழிலாளர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைத் தாக்குவதை இலக்காகக் கொண்டிருக்கிறார் என்றார். எந்த சூழலிலும் அவர் வெற்றி கொள்வதை கனடா அனுமதிக்காது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |