இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பை விற்கிறதா மெட்டா? மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு வந்த சிக்கல்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற பிரபல சமூகவலைத்தளங்களின் தாய் நிறுவனமாக மெட்டா உள்ளது.
மெட்டா
முன்னதாக பேஸ்புக் என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு மெட்டா என பெயர் மாற்றம் செய்தார் அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்.
கடந்த 2012 ஆம் ஆனது இன்ஸ்டாகிராமை 1 பில்லியன் டொலருக்கும், 2014 ஆம் ஆண்டு வாட்ஸ்அப்பை 19 பில்லியன் டொலருக்கும் மெட்டா நிறுவனம் வாங்கியது.
இந்த சமூகவலைத்தளங்களை, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். 182 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.
சந்தையில் மெட்டா ஆதிக்கம்
இந்நிலையில், போட்டி நிறுவனங்களை விலைக்கு வாங்கி சமூகவலைத்தள சந்தையில் மெட்டா நிறுவனம் ஆதிக்கம் செலுத்துவதாக மெட்டா மீது அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷன்(FTC) வழக்கு தொடர்ந்துள்ளது.
பேஸ்புக்கை மேம்படுத்துவதற்கு பதிலாக, அதற்கு போட்டியாக வளர்ந்து வளரும் நிறுவனங்களை வாங்கி, தனது ஆதிக்கத்தை செலுத்துகிறது. இதனால் பயனர்களுக்கு மாற்று என்பது இல்லாமல் போய் விட்டது என FTC குற்றஞ்சாட்டியுள்ளது.
'போட்டியிடுவதை விட வாங்குவது நல்லது" என மார்க் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலை FTC தனது குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக சமர்ப்பித்துள்ளது.
மார்க் வாக்குமூலம்
இந்த வழக்கில் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார்.
FTCயின் குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், பயனர்களுக்கு புதுமை மற்றும் மேம்பட்ட அனுபவத்தை வழங்கவே மற்ற நிறுவனங்களை வாங்கினோம்.
பயனர்கள் வீடியோ உள்ளிட்டவற்றில் அதிக நேரம் செலவிட்டாலும், ஒருவரை அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் வைத்திருக்க வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம்.
டிக் டாக், ஸ்னாப்சாட், யூடியூப் என பல சமூகவலைத்தளங்களும் தங்களுக்குப் போட்டியாக உள்ளது. அரசின் ஒப்புதலுடன் தான் வாங்கினோம் போன்ற வாதங்களை முன்வைத்துள்ளார்.
வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வழக்கில் FTC வெற்றி பெற்றால் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை மெட்டா விற்க வேண்டிய சூழல் வரும்.
இது மெட்டா நிறுவனத்தின் வருமானத்தில் பேரிழப்பாக அமையும். இணைய தேடல் சந்தையை சட்டவிரோதமாக ஆதிக்கம் செய்வதாக கூகிள் நிறுவனத்தின் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |