எதுவேண்டுமானாலும் நடக்கலாம்... டொனால்டு ட்ரம்பால் அச்சத்தில் மார்க் ஜுக்கர்பெர்க்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பால் சிறையில் அடைக்கப்படும் அபாயம் இருப்பதைக் கண்டு பேஸ்புக் கோடீஸ்வரர் மார்க் ஜுக்கர்பெர்க் உண்மையிலேயே பயப்படுகிறார் என்று அரசியல் நிபுணர் ரோரி ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப ஜாம்பவான்கள்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து மெட்டா உரிமையாளர் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அச்சத்தில் இருக்கிறார்கள் என்று ஜுக்கர்பெர்க்கிற்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளதாகவே அரசியல் நிபுணர் ரோரி ஸ்டீவர்ட் குறிப்பிடுகிறார்.
ட்ரம்பின் பதவியேற்பு விழாவில், உலகின் மிகப்பெரிய பணக்காரரும், விவாத கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்து வருபவருமான எலோன் மஸ்க்குடன் ஜுக்கர்பெர்க் காணப்பட்டார்.
மேலும், எப்போதும் நடந்திராத வகையில், அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர்கள் அனைவரும் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் காணப்பட்டது, உண்மையில் அந்த வரிசையில் சிலருக்கு ஏற்பட்டுள்ள பயமே காரணம் என கூறப்படுகிறது.
மார்க் ஜுக்கர்பெர்க் விவகாரத்தில், ட்ரம்பை அவர் பகைத்துக் கொண்டால், சிறைக்கு செல்ல நேரிடும் என அவர் அஞ்சுவதாகவே அரசியல் நிபுணர் ரோரி ஸ்டீவர்ட் குறிப்பிடுகிறார்.
நம்பிக்கை இழந்து
மேலும், கடந்த முறை ஜோ பைடனின் வெற்றிக்குப் பின்னால் மார்க் ஜுக்கர்பெர்க்கின் பேஸ்புக் நிறுவனம் இருப்பதாக ட்ரம்ப் கருதுவதாகவும் கூறப்படுகிறது. 2020 தேர்தல் வெற்றி தம்மிடம் இருந்து பறிக்கப்பட்டதாக டொனால்டு ட்ரம்ப் தற்போதும் உறுதியாக நம்பிவரும் நிலையில், அதில் மெட்டா நிறுவனத்திற்கும் பங்கிருப்பதாக ட்ரம்ப் வட்டாரங்கள் கருதக் கூடும் என்கிறார் ரோரி ஸ்டீவர்ட்.
ஆனால், 2020 தேர்தலில் ட்ரம்பின் வெற்றியைப் பறித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதே உண்மை என்றும் ரோரி ஸ்டீவர்ட் குறிப்பிடுகிறார். மேலும், அமெரிக்க நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாகவும், அதன் வெளிப்பாடாகவே ஜோ பைடன் தமது குடும்ப உறுப்பினர்களுக்கே உத்தியோகப்பூர்வ மன்னிப்பு வழங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க நீதித்துறையை பழிவாங்கும் கருவியாக ஜோ பைடன் நிர்வாகம் மாற்றி வைத்துள்ளதாக டொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். இதனாலையே ட்ரம்ப் பொறுப்புக்கு வந்ததும் 2021 ல் நாடாளுமன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் மன்னிப்பு வழங்கி விடுவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |