வெறும் 10 நொடிகளில் ரூ 20 லட்சம் கோடி இழப்பு... ட்ரம்பால் ரத்தக்களறியான பங்குச்சந்தை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்பால் உலகம் முழுவதும் குழப்பம் ஏற்பட்டுள்ளதுடன், இந்திய பங்குச் சந்தைகளை 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு பள்ளத்தில் தள்ளியுள்ளது.
சீனாவிற்கு 54 சதவீதம்
அத்துடன் வர்த்தகம் தொடங்கிய சில நொடிகளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் கிட்டத்தட்ட 4,000 புள்ளிகள் குறைந்து, அதன் கடைசி வர்த்தக அமர்விலிருந்து 3.5 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தது, அதே நேரத்தில் நிஃப்டி இன்று காலை 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.
ட்ரம்பின் கடும்போக்கு கொள்கைகளால் பீதியடைந்த ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட பெரும் விற்பனையைத் தொடர்ந்து இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி, அமெரிக்க எதிர்கால பங்குகள் இன்று மாலை மீண்டும் வர்த்தகம் தொடங்கும் போது குறிப்பிடத்தக்க இழப்புகளை எதிர்கொள்ளும் என்றே கூறப்படுகிறது.
அமெரிக்காவின் வர்த்தக பங்காளிகள் அனைவருக்கும் அடிப்படை வரியாக 10 சதவீதமும், சீனாவிற்கு 54 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவிற்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தைகள் ஆட்டம் காணும் நிலையிலும், எதிர்கால நலன் கருதி இந்த கசப்பு மருந்தை ஏற்க வேண்டும் என்றே ஜனாதிபதி ட்ரம்ப் பதிலளித்துள்ளார். இந்தியாவில் வார இறுதி விடுமுறைக்குப் பிறகு காலை 9 மணிக்கு வர்த்தகம் மீண்டும் தொடங்கியதும், ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் 3,939.68 புள்ளிகள் சரிந்து 71,425.01 ஆக இருந்தது.
50க்கும் மேற்பட்ட நாடுகள்
இதே வேளை நிஃப்டி 1,160.8 புள்ளிகள் சரிந்து 21,743.65 ஆக இருந்தது. இன்று காலையும் ரூபாயின் மதிப்பு சரிந்து, அமெரிக்க டொலருக்கு எதிராக 30 பைசா குறைந்து 85.74 ஆக இருந்தது. சீனா, ஜப்பான், தைவான் மற்றும் ஹொங்ஹொங்கில் ட்ரம்ப் வரி விதிப்பு பெரும் சரிவை ஏற்படுத்தியதால், ஆசிய பங்குச் சந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் பங்குகள் 4% க்கும் மேலாக சரிந்துள்ளன, அதே நேரத்தில் ஹொங்ஹொங்கில் ஹேங் செங் குறியீடு 10% க்கும் மேலாக சரிந்துள்ளது. ஆரம்ப வர்த்தகத்தில் 8% க்கும் அதிகமாக சரிந்த பின்னர் ஜப்பானில் நிக்கி குறைந்தது 6.5% சரிந்துள்ளது.
தைவானின் முக்கிய வர்த்தக குறியீடு கிட்டத்தட்ட 10% சரிந்தது, சிங்கப்பூரின் குறியீடு 8% க்கும் அதிகமாக சரிந்துள்ளது. இதனிடையே, வரிவிதிப்பில் இருந்த தப்ப 50க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவை எந்த நாடுகள் என்பது தொடர்பான தகவலேதும் இதுவரை வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |