திருமணமான மறுநாளே மாயமான புதுப்பெண்! மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..அம்பலமான மோசடி
தமிழக மாவட்டம் திருப்பூரில் திருமணமான மறுநாளே மாயமான புதுமணப்பெண், தரகராக செயல்பட்ட தனது கணவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.
பிரிந்து சென்ற மனைவி
திருப்பூரின் தாராபுரம் பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்த காற்றாலை மெக்கானிக் ராதாகிருஷ்ணன் (29). இவரது மதுபழக்கத்தைப் பிடிக்காத இவரின் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.
இதனால் ராதாகிருஷ்ணனுக்கு இன்னொரு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். அதன்படி கேரளாவைச் சேர்ந்த தரகர் ஒருவர் மூலம் பெண் பார்க்கப்பட்டது.
பின்னர் பெண் வீட்டில் வசதி இல்லை என்றும், அவரின் குடும்பத்திற்கு 1 1/2 பவுன் நகை, தரகருக்கு ரூ.80,000 தர வேண்டும் என்று பேசப்பட்டது.
மோசடி அம்பலம்
அதேபோல் ராதாகிருஷ்ணன் பேசிய நகை, பணத்தை அளித்துவிட்டு திருமணம் செய்துள்ளார். முதலிரவு அன்று தனக்கு மாதவிடாய் எனக் கூறிய புதுப்பெண், மறுநாள் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியிருக்கிறார்.
மனைவியை அழைத்துக்கொண்டு ராதாகிருஷ்ணன் பொள்ளாச்சி சென்றுள்ளார். அங்கு புதுமணப்பெண் திடீரென மாயமாகிவிட்டார். நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்காததால் ராதாகிருஷ்ணன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
பின்னர் பொலிஸிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், அப்பெண் திட்டமிட்டு ராதாகிருஷ்ணனை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்தது.
தரகராக செயல்பட்டவர் அப்பெண்ணின் கணவர் என்றும், பணத்திற்காக தனது மனைவியையே ராதாகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைத்து மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து திருமண தரகரையும், புதுப்பெண்ணான அவரது மனைவியையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |