காதல் திருமணம் செய்த இளம் தம்பதியினர் வெட்டிக் கொலை: பெண்ணின் தந்தையை கைது செய்து திடீர் திருப்பம்
தமிழக மாவட்டம், தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த இளம் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பெண்ணின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இளம் தம்பதி கொலை
தூத்துக்குடி மாவட்டம், முருகேசன் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வசந்தகுமாரின் மகன் மாரிச்செல்வம் ( 23). அதே போல திருவிக நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மூத்த மகள் கார்த்திகா.
இவர்கள் இருவரும் நீண்ட நாள்களாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், கார்த்திகாவின் வீட்டில் அதிக வசதி என்று கூறப்படுகிறது.
இதனால், இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவே, தேவர் ஜெயந்தி அன்று திட்டமிட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், மாரிச்செல்வத்தின் குடும்பத்தினர் இவர்களது திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்து, தங்களது வீட்டில் தங்கவைத்துள்ளனர். இதன் பின்னர், இரு தினங்களுக்கு முன்பு கார்த்திகாவின் தந்தை உள்ளிட்டோர் சிலர் மாரிச்செல்வத்தின் வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, நேற்று 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் புதுமண தம்பதியான கார்த்திகாவையும், மாரிச்செல்வதையும் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
பெண்ணின் தந்தை கைது
இதுகுறித்து தகவலறிந்து வந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு, குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை பொலிஸார் இன்று கைது செய்தனர். மேலும், உறவினர்களான கருப்பசாமி, பரத் ஆகிய மூன்று பேர்கள் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |