முகக்கவசம் "தனிநபர் விருப்பம்" தான் - ஆனால்., நிபுணர்கள் தொடர் எச்சரிக்கை!
பிரித்தானியாவில் வரும் ஜூலை 19-ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிவது அவரவர் "தனிப்பட்ட விருப்பமாக" அமைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வரும் ஜுலே 19-ஆம் திகதியை 'Freedom day' என அழைக்கின்றனர், ஏனெனில் அன்று முதல் ஊரடங்கு மற்றும் கொரோனா விதிமுறைகள் முற்றிலுமாக தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், ஜூலை 19-ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிவது அவரவர் "தனிப்பட்ட தேர்வாக" இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், சில மருத்துவ வல்லுநர்கள் நெரிசலான சூழலில் அவற்றை தொடர்ந்து அணியவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.
இது குறித்து, NHS இங்கிலாந்தின் மருத்துவ இயக்குநர் பேராசிரியர் ஸ்டீபன் போவிஸ் (Stephen Powis) பேசுகையில், "நெரிசலான, உட்புற சூழலில்" முகக்கவசத்தை தொடர்ந்து அணிவதை பின்பற்றலாம் என்றார்.
அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் (Sage) உறுப்பினரான கலாம் செம்பிள் (Calum Semple) இதையே கூறுகிறார்.
அதேபோல், கடைகள் போன்ற பகுதிகளில் முகக்கவசங்களைப் பயன்படுத்துவது உட்பட, சில விதிமுறைகளுக்கு தளர்வு அளிக்காமல் இருக்குமாறு British Medical Association அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இதற்கிடையில், பல்லாயிரக்கணக்கான பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமான Unite the Union, முகக்கவசம் அணிவது பொதுப் போக்குவரத்தில் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் போரிஸ் ஜான்சன் இது குறித்து விவரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.