லண்டனில் துணிகர சம்பவம்... துப்பாக்கியுடன் மிரட்டியவரை துணிச்சலாக எதிர்கொண்ட கடைக்காரர்
லண்டனில் உள்ள கடை ஒன்றில் நுழைந்து துப்பாக்கியுடன் மிரட்டிய கொள்ளையனை, கடை ஊழியர் துணிச்சலாக எதிகொண்ட சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
லண்டனில் Shadwell பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி கடந்த நிலையில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வாடிக்கையாளர் என கடைக்குள் நுழைந்த அந்த கொள்ளையன், கருப்பு பை ஒன்று குறித்து கடை ஊழியரிடம் வினவியுள்ளார்.
ஆனால் அந்த நபர் என்ன சொல்கிறார் என்பதை தெளிவாக கேட்காத நிலையில், என்ன வேண்டும் என 40 வயது கடந்த அந்த கடை ஊழியர் மீண்டும் கேட்கவே, கடைக்கு வந்த அந்த கொள்ளையன் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத அந்த கடைக்காரர் அலறல் சத்தத்துடன் துப்பாக்கிதாரி மீது சாக்லேட் பார்களை வீசியுள்ளார். இதில் கொஞ்சம் தடுமாறிப்போன அந்த கொள்ளையன், அங்கிருந்து தப்பும் முன்னர் கடைக்காரரின் தலையில் துப்பாக்கியால் பலமாக தாக்கிவிட்டு மாயமாகியுள்ளான்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவந்த பொலிசார், தப்பிய அந்த கொள்ளையனை தேடியுள்ளனர். இருப்பினும், இதுவரை கைது நடவடிக்கை ஏதும் முன்னெடுக்கப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
தலையில் காயம்பட்ட அந்த கடைக்காரருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.