புதருக்குள் பேச்சு மூச்சின்றி கிடந்த இளம்பெண்... கத்திக்குத்து காயங்களுடன் சிறுவன்: சுவிஸில் சம்பவம்
சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் கத்திக்குத்து காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிறுவன ஒருவன் மீட்கப்பட்ட நிலையில், அதே பகுதியில் பெண் ஒருவரும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
பாஸல் மண்டலத்தின் துறைமுக பகுதியில் ஞாயிறு அதிகாலை சுமார் 2 மணியளவில் 20 பேர் கொண்ட கும்பல் மோதலில் ஈடுபட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், கத்திக்குத்து காயங்களுடன் 15 வயது சிறுவனை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டுள்ளனர்.
இன்னொரு 20 வயதில் ஒருவரையும் காயங்களுடன் பொலிசார் மீட்டனர். கும்பலாக சேர்ந்து மோதலில் ஈடுபட்ட அவர்கள் பொலிசாரின் வருகையை அறிந்து அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் 22 வயது இளைஞர் ஒருவரை பாஸல் மண்டல பொலிசார் கைது செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சரளமாக ஜேர்மன் மொழி பேசியுள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த தாக்குதல் சம்பவம் நடப்பதற்கும் 3 மணி நேரம் முன்னர், இளம்பெண் ஒருவரை பேச்சு மூச்சின்றி புதருக்குள் இருந்து மீட்டுள்ளனர்.
அவரால் உதவி கேட்க முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், அப்பகுதியில் உள்ள தனியார் காவலாளிகள் சிலராலையே அடையாளம் காணப்பட்டு, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த இரண்டு சம்பவங்களும் தொடர்புடையதா என விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது.
மேலும், இது தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணை தொடர்பில் பொலிசாருக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.