புலம்பெயர்ந்தோரை மொத்தமாக நாடுகடத்த திட்டம் வைத்துள்ள ஜேர்மன் கட்சி
ஜேர்மனியில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இரண்டாவது பெரும் கட்சியாக வெற்றிபெறலாம் என கருதப்படும் கட்சி ஒன்று, புலம்பெயர்ந்தோரை மொத்தமாக நாடுகடத்த திட்டம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த திட்டம்
ஜேர்மனியின் Saxony மாகாணத்திலுள்ள Riesa நகரில், சமீபத்தில், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி மாநாடு ஒன்றை நடத்தியது.
அடுத்த மாதம் 23ஆம் திகதி ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அந்த மாநாடு நடைபெற்றது.
அந்த கட்சி நடத்தும் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் ஏராளமானோர் Riesa நகரில் சாலைகளில் திரண்டு பேரணி நடத்தியது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், AfD கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சர்ச்சைக்குரிய பல திட்டங்களை முன்வைத்துள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
AfD கட்சியின் தலைவரான ஆலிஸ் (Alice Weidel), வெளிப்படையாக ’remigration’ என்னும் ஒரு விடயம் குறித்து பேசியுள்ளார்.
அதன் பொருள், ஜேர்மனியிலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் அல்லது நாடுகடத்துவது ஆகும்.
அத்துடன், ஜேர்மன் எல்லைகளை மூடுவது, மீண்டும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கத் துவங்குவது, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது, யூரோ நாணயத்தை கைவிடுவது மற்றும் புதிய மாகாணங்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது ஆகிய சர்ச்சைக்குரிய பல விடயங்களை தனது தேர்தல் அறிக்கையில் AfD கட்சி முன்வைத்துள்ளது.
கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவரான ஆலிஸ், பெரிய அளவில் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களை நாடுகடத்த இருப்பதாகவும், அதை தான் remigration என அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த AfD கட்சிக்குதான் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துவருகிறார் என்பது இன்னொரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.