வீட்டில் முடங்கிய லட்சம் மக்கள்... ஸ்தம்பிக்கும் சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், லட்சம் மக்கள் தனிமைப்படுத்தல் அல்லது கண்காணிப்பில் உட்படுத்தப்பட்டுள்ளதால் தொழில்துறை ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. புதன்கிழமை வெளியான தரவுகளின் அடிப்படையில், மொத்தமாக 118,508 பேர்கள் தனிமைப்படுத்துதல் அல்லது கண்காணிப்பில் இருப்பதால் வீடுகளிலேயே முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 மாநிலங்களில் இருந்து வெளியான தரவுகளின் அடிப்படையிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
லட்சம் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் ஊழியர்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பிரித்தானியாவை பொறுத்தமட்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் மருத்துவமனைகள் பல போதுமான ஊழியர்கள் இல்லாமல் அவதிப்படுவதாகவும், தெருக்களில் குப்பைகள் குவிந்து வருவதாகவும், பொது போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்படும் சூழலும் உருவாகியுள்ளது.
இதே நிலை தற்போது சுவிட்சர்லாந்தும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை வாரத்திற்கு 45% அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளும் அதிகரிப்பதால், மேலதிக சிக்கல் ஏற்படுவது உறுதி என்கிறார்கள் நிபுணர்கள். ஏற்கனவே கேட்டரிங் மற்றும் ஹொட்டல் தொழில் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
தற்போது சுகாதாரத்துறையும் ஊழியர்கள் பற்றாக்குறையால் சிக்கலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொது போக்குவரத்தும், சேவைகளை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெடரல் நிர்வாகம் உடனடியாக தலையிட்டு துரித நடவடிக்கை முன்னெடுக்க தவறினால், விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.