பல பேர்களை பலி வாங்கிய ஆம்புலன்ஸ் வாகன விபத்து: பதறவைக்கும் காணொளி காட்சிகள்
இந்தியாவின் கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் நோயாளி மற்றும் இரண்டு உதவியாளர்களுடன் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மோசமான விபத்தில் சுங்கச்சாவடி ஊழியர் உட்பட நால்வர் பலியானதாகவும், ஆம்புலன்ஸ் சாரதி காயங்களுடன் தப்பியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டமான உடுப்பியில் மழை பெய்த ஈரமான சாலையில் நடந்த பயங்கர விபத்து தொடர்பில் சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகள் பார்ப்பவர்களை திகிலடைய வைத்துள்ளது.
வெளியான காட்சிகளில், ஆம்புலன்ஸ் வாகனம் வருவதைப் பார்த்த சுங்கச்சாவடி ஊழியர்கள் மூன்று பிளாஸ்டிக் தடுப்புகளை அகற்ற பாதுகாப்புக் காவலர்கள் மற்றும் டோல் ஆபரேட்டர்கள் எனத் தோன்றும் சிலர் அவசரப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம்.
மேலும், சுங்கச்சாவடிக்கு முன்பு இருந்த இரண்டு தடுப்புகளை ஊழியர்களில் ஒருவர் வெற்றிகரமாக அகற்றிய நிலையில், கடைசி தடுப்பை ஒருவர் வெளியே இழுக்க முயற்சிக்க, ஆம்புலன்ஸ் வாகனம் கட்டுப்பட்டை இழந்து நிலைதடுமாறி, வேகமாக வந்து மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் சுங்கச்சாவடி ஊழியர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்த மூவர் என நால்வர் பலியானதாகவும், ஆம்புலன்ஸ் சாரதி காயங்களுடன் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.