பிரெக்சிட்டால் பிரான்சுக்கு பெருந்தொகை இழப்பு: எவ்வளவு தெரியுமா?
பிரெக்சிட்டால் பிரான்சுக்கு 200 மில்லியன் யூரோக்கள் இழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
முழுமையான எல்லைக் கட்டுப்பாட்டைநிறுவுவதற்காக, சுங்க அலுவலர்கள், எல்லை காவலர்கள், ஆய்வாளர்கள், அலுவலகங்கள், கார் நிறுத்தங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை புதிதாக ஏற்படுத்துவதற்காக பிரான்ஸ் ஏராளம் செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது 1,300 கூடுதல் அலுவலர்கள் இதற்காக பணியிலமர்த்தப்பட்டுள்ளதாக பொது கணக்கியல் துறை அமைச்சர் Olivier Dussopt தெரிவித்துள்ளார்.
சொல்லப்போனால், எல்லையையே புதிதாக உருவாக்கியிருக்கிறோம் என்று கூறிய அவர், பிரித்தானியா நமக்கு மிக அருகில் இருப்பதாலும், பல வழிகளில் மக்கள் பிரான்சுக்குள் நுழைவதாலும், உதாரணமாக, படகுகள் மற்றும் சுரங்கப்பாதைகள் வழியாக, அத்துடன் இரு பக்கத்திலும் 30 மில்லியன் பயணிகளும் ஐந்து மில்லியன் கனரக வாகனங்களும் சென்று வருவதாலும் இப்படி செய்யவேண்டியது அவசியமாகிறது என்றார்.
ஆக, இப்படி எல்லையை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பணியிடங்கள், அமைப்புகள் என அனைத்திற்குமாக 200 மில்லியன் யூரோக்கள் செலவிடப்பட உள்ளதாகவும், இது போக, மீன் பிடித்துறைக்கு தனியாக செலவு செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.