இங்கிலாந்தில் பிரமாண்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு: 2,600 வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற்றம்
இங்கிலாந்தில் இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2,600 வீடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் Exeter என்ற இடத்தில் அமைந்திருக்கும் பல்கலைக்கழகம், மற்றும் முதியோர் இல்லம் ஒன்று ஆகியவை அமைந்திருக்கும் ஒரு இடத்துக்கு அருகில், கட்டிடத் தொழிலாளர்கள் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, எட்டு அடி நீளம் கொண்ட வெடிகுண்டு ஒன்றைக் கண்ட அவர்கள், உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள். விரைந்து வந்த பொலிசார், அது இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு என்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.
அது மிகப்பெரிய வகை வெடிகுண்டு என்பதால், எளிதாக அதை செயலிழக்கச் செய்யமுடியாது. அதை என்ன செய்வது என்பது தொடர்பாக பொலிசார் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார்கள்.
வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள சுமார் 2,600 வீடுகளில் வசிப்போர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இரண்டாம் உலகப்போரின்போது ஜேர்மனியால் வீசப்பட்ட இதுபோன்ற ஏராளம் வெடிகுண்டுகள், பல நாடுகளில் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


